முக்கிய செய்திகள்

மதுரையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விபரம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.24 - மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகம் குறித்த விபரத்தை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் சகாயம் அறிவித்துள்ளார். நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்களிடமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட நகராட்சிகளில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத்தாக்கல் செய்யலாம். 

பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத்தாக்கல் செய்யலாம். ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களான இணை இயக்குனர்களிடம் அவர்களது அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுத்தாக்கல் செய்யலாம். 

ஊராட்சி ஒன்றியகுழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உதவி இயக்குனர் நிலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத்தாக்கல் செய்யலாம். சிற்றூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உதவியாளர் நிலையில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுத்தாக்கல் செய்யலாம் என்று கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: