முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சனை: நெடுமாறன் வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

வள்ளியூர், அக். 19 - கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இடிந்தகரைக்கு வந்த பழ. நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இந்த பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் தமிழக மக்களுக்காகவும், குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காகவும் நடத்துகிற போராட்டம். அறிவியல் துறையில் மிக முன்னேறிய ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலேயே அணு உலையால் பெரும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. நமது நாடு அந்த நாடுகளை போல அறிவியல் துறையில் முன்னேறிய நாடல்ல. அறியாமை மக்கள் வாழும் நமது நாட்டில் அணு உலை விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மக்களுக்கு தெரியாது. 

எனவே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இதை கருதி கூடங்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு அறவே கைவிட வேண்டும். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக தென் மாவட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும். பிற பகுதிகளை சேர்ந்த தமிழக மக்களும் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றார். மேலும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை விரைவில் அழைத்து இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு போராட்டத்தில் பங்கு பெறுவது குறித்தும் ஆலோசித்து வருகிறேன். மிக விரைவில் அதை செய்வேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்