முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேயர்கள் - நகராட்சி தலைவர்கள் 25ம் தேதி பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 23 - புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் வரும் 25 ம் தேதி பதவியேற்கின்றனர். வாக்கு எண்ணிக்கையின் போது இறுதியாக 10 மாநகராட்சிகளையும், 88 நகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. 286 பேரூராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. 23 நகராட்சிகளிலும், 121 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வரும் 25 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்கின்றனர். 

தமிழகத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 759 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டமாக 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 77.02 சதவீதமும், 2 ம் கட்ட தேர்தலில் 80.4 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. 3 கோடிக்கு மேலான வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி பிரமாணம் வரும் 25 ம் தேதி நடக்கவுள்ளது. 

10 மேயர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களும் பதவியேற்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் 29 ம் தேதி மாநகராட்சிகளில் துணை மேயர், நகராட்சிகளில் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கவுன்சிலர்கள் வாக்களித்து துணை மேயர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றி உள்ள அ.தி.மு.க. பெரும்பாலான கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. கவுன்சிலர்கள் மூலமே துணை மேயர், மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி மாநகராட்சிகளில் துணை மேயர், மண்டல தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் அ.தி.மு.க.வே வகிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் மாநகராட்சிகளில் அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க. பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!