முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 பெண் மேயர்களை உருவாக்கி மகளிருக்கு மேம்பாடு தந்த- ஜெயலலிதா

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, அக். - 24 -  உள்ளாட்சி தேர்தல் மூலம் 6 பெண் மேயர்களை உருவாக்கி மகளிருக்கு முக்கியத்துவம் தந்து மகளிர் மேம்பாட்டுக்கு வழிவகை செய்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது அவரது மகத்தான சாதனையாகும். தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதா, உள்ளாட்சி அமைப்புகளில் அதை விட கூடுதல் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி மகளிரை கவுரவப்படுத்தி உள்ளார். மொத்தமுள்ள 10 மாநகராட்சியில் 6 மாநகராட்சிகளில் பெண்களை மேயர் வேட்பாளர்களாக அறிவித்து அவர்கள் வெற்றியடைந்து மேயர் பதவியை பிடித்துள்ளனர். திருச்சியில் ஜெயாவும், வேலூரில் கார்த்திகாயினியும், நெல்லையில் விஜிலாசத்தியானந்தமும், ஈரோட்டில் மல்லிகா பரமசிவமும், திருப்பூரில் விசாலாட்சியும், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவும் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மேயர்களில் மிகவும் இளையவர் வேலூர் கார்த்திகாயினி ஆவார். இவருக்கு 28 வயதே ஆகிறது. நானோ தொழில்நுட்பத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். பெண் மேயர்களில் அதிகம் படித்தவரும் இவரே. கார்த்திகாயினி கூறுகையில், திடக் கழிவுகளை அகற்றுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன். ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. இதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நெல்லை மேயர் விஜிலா கூறுகையில், அரசியலில் அதிகளவு பெண்கள் நுழைவதன் மூலம் இந்த அமைப்பை புனிதமாக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் வெற்றியடைந்துள்ளனர். வெளிப்படையான லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதே குறிக்கோள் என்றார். திருச்சி மேயரான ஜெயா, வரலாற்று முதுகலை பட்டம் பெற்றவர். அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கான இலவச மாங்கல்ய திட்டம், திருமண உதவி திட்டம் போன்ற திட்டங்கள் எனக்கு உதவி புரிந்தன என்றார். பெண் மேயர்களாக வெற்றி பெற்றிருப்பவர்களில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திருப்பூர் விசாலாட்சி ஆவார். வெற்றி பெற்றவர்கள் அனைவருமே முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தால் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றுவோம். செயல்படுத்தப்படும் திட்டங்களை எந்த குறைபாடுகளுமின்றி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உறுதிபட கூறியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே பெண்களுக்காக மகளிர் காவல் நிலையம், தாலிக்கு தங்கம், இலவச திருமண நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு என அறிவித்து விட்டு அதனை செயல்படுத்தாமல் மத்திய அரசும், கடந்த கால தி.மு.க அரசும் வாயளவிலேயே பேசிக் கொண்டிருந்தன. மத்திய அரசும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வராமல் இழுத்தடித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மகளிரும் மனதார பாராட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்