முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு மாயாவதி கட்சி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, நவ.25 - மாயாவதி மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி கூறுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 5 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி அம்மாநிலத்தை ஆளும் மாயாவதிக்கும், ஏற்கனவே ஆட்சி செய்த முலாயம்சிங் யாதவிற்கும் மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றி தெரியாது. அவர்கள் உயர் பதவிகளுக்கு சென்றபிறகு மக்களை மறந்துவிட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பேரணிகளில் குற்றம் சாட்டிவருகிறார். 

இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசுக்கு எதிராக ராகுல்காந்தி கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். உண்மை நிலை புரியாமல் அவர் பேசிவருகிறார். அவரால் இந்தி மொழியை வாசிக்கவோ, எழுதவோ முடியாது. அவரது உதவியாளர்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் குறித்து ஆழ்ந்த அறிவு கிடையாது. இதனால்தான் மாநிலம் குறித்து அவரிடம் இருக்கும் சரியான புள்ளி விபரங்களை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

மாநிலத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால்தான் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரசை மக்கள் ஓரம்கட்டி வைத்திருக்கிறார்கள். மாநிலத்தை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் பின்தங்கிய மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்தது. தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவதால் மட்டுமே மக்களைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள முடியாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், மாநிலம் பல துறைகளிலும் பின்தங்கி இருப்பதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளும் தற்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் தவறான ஆட்சியுமே காரணம். மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை பகுஜன்சமாஜ் கட்சியினரும், காங்கிரஸ் காரர்களும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் அவர்கள் கூட்டணியாக இருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்