ஜப்பானில் பயங்கர பூகம்பம் - கட்டிடங்கள் தரைமட்டம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் 12 - ஜப்பானில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமிப் பேரலைகளும் எழுந்தன.  பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பூகம்ப இடிபாடுகளிலும், சுனாமி பேரலைகளிலும் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஜப்பான் அமைச்சரவை பிரதமர் தலைமையில் அவரச ஆலோசனை நடத்தி வருகிறது. 

பூகோள ரீதியாக தீவு நாடான ஜப்பான் பூகம்ப மண்டலத்திற்குள் இருக்கிறது. இங்கு அடிக்கடி நில நடுக்கங்களும், அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகளும் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் பல்லாயிரம்பேர் பலியானார்கள். இப்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானை தாக்கியது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் சுனாமி பேரலைகள் ஆறு மீட்டர் உயரத்திற்கு சீறிவந்து நிலப்பகுதிக்குள் நுழைந்தது. 

ஜப்பானில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் பசிபிக் மகாசமுத்திரத்தை ஒட்டியுள்ள ரஷ்யா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிகோ, பெரு, ஹவாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாகி, புகுஷிமா போன்ற முக்கிய நகரங்களை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி பேரலைகள் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நிலப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வழியில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் அனைத்தும் ஏதோ தூசுகள் போல வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பூமிக்கு கீழை 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு சாலைகளிலும், உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். ஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சில இடங்களில் கட்டிடங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கின. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 8.9 ஆக பதிவாகி உள்ளது என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1995 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்றும் அந்த மையம் கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி பேரலை தாக்குதல் காரணமாக டோக்கியோ உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல சாலை போக்குவரத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ நகர் உட்பட பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. 

பூகம்ப தாக்குதல் காரணமாக ஜப்பானில் உள்ள முக்கியமான அணு மின்சார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த அணு மின்சார நிலையங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இப்படி ஒரு நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளதால் அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையில் ஜப்பான் அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது. 

டோக்கியோ, ஒசாகி ஆகிய நகரங்களில் 30 பேர் பலியானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் மக்கள் தொகை  மிகுந்த ஹோன்சு தீவுதான் இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு பூகம்பத்தை தான் தனது வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று ஜப்பான் வாசி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக 900 மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருக்க, நகரின் மையப் பகுதியோ எரிந்துகொண்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்டாய் விமான நிலையம் முழுவதுமாக சுனாமி பேரலைகளால் மூழ்கடிக்கப்பட்டது. சுனாமிக்கு பயந்து விமான நிலையத்தில் இருந்த அனைவரும் விமான நிலையத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மீது ஏறி உயிர்தப்பினர். விமான நிலையத்தின் ஓடுதளங்கள் நீருக்குள் இருக்கின்றன. எண்ணை கிணறுகள் தீப்பற்றி அதிலிருந்து கறும்புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது. 

சுனாமி ஏற்பட்டபோது கடலில் இருந்த மீன்பிடி படகுகள், சிறிய கப்பல்கள் ஆகியவை பேரலைகளால் நகருக்குள் கொண்டுவரப்பட்டன. ஜப்பானில் இரு தீவுகளை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் ஆழிப் பேரலைகளால் தாக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.   

பூகம்பம், சுனாமி இரண்டும் ஒரே நேரத்தில் ஜப்பானை தாக்கியதால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் அதிக அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின்போது 10 ஆயிரம் கோடி டாலருக்கு ஜப்பானில் சேதங்கள் ஏற்பட்டன. பூகம்ப வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திய 1995 ல் ஏற்பட்ட பூகம்பம்தான். 

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர்கள் சகஜமான சம்பவமாகிவிட்டதால் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே ஜப்பான் கடலோர பகுதிகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை சங்குகள் ஒலித்தன. இதனால் கடலோர பகுதியில் இருந்த மக்கள் பல்வேறு உயிர்காக்கும் வாகனங்கள் மூலம் 5 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலப்பகுதிக்கு சென்று தங்கிவிட்டனர். இதனால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. என்றாலும் பூகம்பம், சுனாமியால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு தற்காலிக மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: