முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவுக்கு போக்குவரத்து சீரமைப்புபோலீஸ் பாதுகாப்பு - ராமானுஜம்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 11 - முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாக தமிழக- கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடந்த 7 நாட்களாக இருபக்கமும் வாகனங்கள் செல்லவில்லை. அதை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் கூறியுள்ளார்.   முல்லை பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று 7 ​வது நாளாக பஸ்,​லாரி வாகனங்கள் செல்லவில்லை. தொழிலாளர்களும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் இந்த வழியில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது பற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க கேரள- தமிழக எல்லை பகுதியில் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் 500 போலீசாரும், 6 கம்பெனி சிறப்பு காவல் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஐ.ஜி. மேற்பார்வையில் டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டுகள் அங்கு முகாமிட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறவில்லை. குமுளி, கம்பம், போடி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைக்க பொது மக்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் குமுளி வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. குமுளி வழியாக அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் செங்கோட்டை மார்க்கமாக செல்வதால் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் கேரளாக்காரர்கள் நடத்தி வரும் கடைகளை குறிவைத்து தாக்கியது தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேவையான அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரளா தலைமைச் செயலாளர் பிரபாகரன். டி.ஜி.பி. ஜேக்கப் ஆகியோருடன் பேசி இருக்கிறோம். கேரளா செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு தருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்