முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயல்: முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை. டிச.30​- சென்னைக்கு 250 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள கடுமையான சூறாவளி புயலான தானே' நாளை காலை நாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், மிக அதிகபட்சமாக 25 செ.மீ. வரை பலத்த மழை கொட்டும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மிகக் கடுமையான சூறாவளி புயலான தானே' மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் சென்னைக்கு 250 கிலோ மீட்டர் கிழக்கு மற்றும் தென்கிழக்கிலும் புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த தானே' புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு கடற்கரையை நாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தானே புயல் கரையை நெருங்கும்போது லேசாக பலவீனமடையும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேச கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும். மாலையில் மழை மேலும் வலுவடைந்து சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். 25 செ.மீட்டர் அளவுக்கு கூட மழை இருக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் மிக அபாயம் என்று கருதப்படும் 10ம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் எச்சரிக்கை கொடியும்  கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் எச்சரிக்கை கொடியும் ஏற்றப்பட்டுள்ளன.

சூரைக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வீசும்.  இது படிப்படியாக உயர்ந்து 110 கிலோ மீட்டர் முதல் 135 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல் அலைகள் 4 அடி உயரத்திற்கு எழும்பியது. இதன் காரணமாக கடற் கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதியில் வெள்ள நீர் புகுவதற்கான அபாயம் உள்ளது. கடல் கொந்தளிப்பு தொடர்ந்து நீடித்தது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி தெற்கு ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

கன மழை நீடிக்கும் என்றும்மரங்கள் வேரோடு சாயக்கூடும், மின் சப்ளை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.  ஏற்கனவே ஆந்திர மாநிலம் நெல்லூர் பிரகாசம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் 8 முதல் 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் வீசுகிறது. இதன் காரணமாக கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில இடங்களில் அடித்துச் செல்லப்பட்டன. வேறு சில இடங்களிலும் படகுகள் சேதம் அடைந்தன. நேற்று காலை முதலே குளிர் காற்றுடன் மழை நீடித்தது. 

தயார் நிலையில் தமிழக அரசு.

சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள புயலின் தாக்கத்தால் மாநகர மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு நிர்வாகமும், மாநகராட்சியும் செய்து வருகின்றன..

மழை வெள்ள பாதிப்பிலிருந்து உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை தொடங்குவதற்கும் அரசு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.  சென்னைக்கு அருகே வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் கடந்த 3 நாட்களாக கடற்பகுதி மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்றிரவு முதல் வடசென்னை கடற்கரை பகுதியில் உள்ள எண்ணூர், அன்னை சிவகாமிநகர், இந்திராகாந்தி நகர், பாரதிநகர், மேட்டுக்குப்பம், காசி கோயில் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல்சீற்றத்தின் காரணமாக தடுப்பு கற்களையும் தாண்டி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.  இதனால் 150 வீடுகள் பாதிப்புக்குள்ளாகின. அவர்கள் எல்லாம் தங்கள் உடைமைகளுடன் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகரித்ததை முன்னிட்டு ராயபுரம், காசிமேடு பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் அதிகமாகி உள்ளது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பதால் அரசுத்துறை அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 15 மண்டல அதிகாரிகளும், பணியாளர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு வாகனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு ராட்சத மோட்டார் இயந்திரங்களும் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூகநலக்கூடங்கள், மருத்துவக்குழுக்கள், உணவு வழங்குவதற்கான சமையற் கூடங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

ஏரிகளில் தண்ணீர் திறப்பு:

தானே புயலின் விளைவாக கடும் மழை பெய்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி பொதுப்பணித்துறை செயலாளர் காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரித்துள்ளார். இதையொட்டி ஏரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தேவைப்பட்டால் ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றும்படி பொதுப்பணித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். நீர்வரத்தை பொறுத்து 200 கன அடியிலிருந்து 2,500 கன அடி நீர் வரை வெளியேற்றுவதற்கும், அதையொட்டி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்படுவதற்கும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

புயல் கரையை கடக்கும் சூழலில் நீர்வரத்து அதிகமாகும் நிலையையொட்டி கடலோர பகுதி மற்றும் ஏரி, குளம் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் சாட்டர்ஜி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!