முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளக் காடாய் காட்சி அளிக்கும் கடலூர் - புதுச்சேரி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கடலூர், டிச. 31 - புதுச்சேரி, கடலூருக்கு இடையே தானே புயல் தீவிரமாகி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கிடையே கரையை கடந்தது. இது மேலும் பலவீனமடைந்து மேற்கு நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 

நேற்று முன்தினம் மாலை புயல் புதுச்சேரியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. அது புதுச்சேரி, கடலூர் இடையில் உள்ள இடத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே அப்பகுதிகளில் சூறைக் காற்று வீசியது. 140 கி.மீ வேகத்தில் வீசிய இந்த காற்று அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தது. இதையடுத்து புதுச்சேரி, கடலூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கடலூர் அருகே தானே புயல் கரையை தொட்டது. காலை 6.30 மணியளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. கடக்கும் போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பயங்கர இரைச்சலுடன் புயல் கரையை கடந்தது.  

 

மரங்கள் சாய்ந்தன:

 

140 கி.மீ. வேகத்தில் வீசிய பயங்கர காற்றால் புதுச்சேரியிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் கம்பங்கள், தொலை தொடர்பு கம்பங்கள், மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்தன. புதுவை மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. கடல் பல மீட்டர் உயரத்திற்கு பொங்கி சூறாவளி காற்று காரணமாக ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. புதுவையில் வம்பா கீரப்பாளையம், குருசுக்குப்பம், தமிழக கடலோர பகுதிகளான சின்ன முதலியார் சாவடி, முல்லை சாவடி, லாலாபட்டு பகுதிகளில் ஊர்களுக்குள் கடல் நீர் புகுந்தது. பெரும்பாலான இடங்களில் செல்போன் டவர்களும் சேதமடைந்ததால் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. 

ஆரோவில் பகுதியில் சுமார் ஆயிரம் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் நிறைய மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. கடலோரம் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. பல இடங்களில் உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. கடலூர், திண்டிவனம், சிதம்பரம், விழுப்புரம் செல்லும் முக்கிய சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து கிடக்கின்றன. புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. 

மின்சார சப்ளை இல்லாததால் குடிநீர் சப்ளையும் தடைபட்டுள்ளது. புயலால் புதுச்சேரிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்போது புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்வதால் திருவண்ணாமலை, தர்மபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும். இநத புயலால் தமிழகத்தில் இதுவரை 12 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மீனவர்கள் வலைகள் அறுந்ததாலும், படகுகள் மோதிக் கொண்டதாலும் அவர்களுக்கு லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

எனினும் ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இந்த புயலால் எந்த பாதிப்பும் இல்லை. சென்னை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் பாதிப்புகள் மிக அதிகம். கடலூரை சூறையாடி விட்டது இந்த தானே புயல். கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது இந்த புயல். புயல் காரணமாக வைகை, அனந்தபுரி, முத்துநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. பல ரயில்கள் தாமதமாக சென்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்