3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 11 - ஆஸ்திரேலியாவில் நடைபெற  இருக்கும் 3 நாடுகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வரும் 15 -ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் அதிரடி வீரரான யுவராஜ் சிங் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இந்த 2 டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

ஆஸ்திரேலிய அணி மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது. 4-வது டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. 

டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலியாவில் 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கின்றன. 

3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் போட்டியில் அதிரடி வீரரான யுவராஜ் சிங் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இதற்கான வீரர்களை தேர்வு செய்கின்றனர். 

இந்திய தேர்வுக் குழுவினர் வரும் 15 -ம் தேதி சென்னையில் கூடி இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்கின்றனர். இதில் இந்திய அணி தரப்பில், பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. 

முன்னதாக இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் நடுவில் யுவராஜ் சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாடு திரும்பினார். அவரை பரிசோதித்துப் பார்த்த போது,நுரையீரலில் காயம் இருப்பது தெரியவந்தது. 

ஆனால் இந்தக் கட்டியால் அவருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். யுவராஜ் சிங் இதற்கான சிகிட்சையை எடுத்துக்கொண்டார். தற்போது நல்ல உடல் நடலத்துடன் இருக்கிறார். எனவே அவர் 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் போட்டியில் இடம் பெறலாம். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 3 நாடுகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டியில் ஆட நான் ஆர்வமாக இருக்கிறேன். நான் தற்போது நல்ல உடற் தகுதியுடன் இருக்கிறேன். இதற்காக நன்கு பயிற்சி எடுத்து வருகிறேன் என்றார் அவர். 

இந்திய அணிக்கான பயிற்சி முகாம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் யுவராஜ் சிங் கலந்து கொண்டார். பயிற்சி முகாமில் அவருக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படவில்லை. அவர் முழு நேரமும் நன்கு ஆடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: