முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸி. அணி 604-ரன் குவிப்பு

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, ஜன. 26 -  இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 604 ரன்னைக் குவித்து ஆட்டத்தை டெக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருவரும் இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இதனால் அந்த அணி பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது.

இந்தப் போட்டியிலும் இந்திய பெளல ர்களால் ஆஸி. வீரர்களை கட்டுப் படுத்த முடியவில்லை. இந்திய பெளலர்கள் ரன்களை அள்ளிக் கொடுத்தனர். அஸ்வின் ஒருவர் மட்டும் 3 விக்கெட் எடுத்தார். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் கை தேர்வு செய்த ஆஸி. அணி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித்து பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலிய அணி இறுதியில் முதல் இன்னிங்சில் இரண்டாவது நாளன்று 157 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 604 ரன்னைக் குவித்து இருக்கிறது. 

முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 98 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 335 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது பாண்டிங் 137 ரன்னுடனும், கிளார்க் 140 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாவது நாளான நேற்று ஆஸி. அணி ஆட்டத்தைத் தொடர்ந்தது. பாண்டிங் மற்றும் கிளார்க் இருவரும் தொடர்ந்து நிலைத்து ஆடினர். பாண்டிங் மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் இரட்டை சதம், அடித்தனர். இது நேற்றைய ஆட்டத்தின் சிறப்பாகும். 

முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 404 பந்தைச் சந்தித்து 221 ரன் எடுத்தார். இதில் 21 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஜாஹிர்கான் வீசிய பந்தில் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கேப்டன் மைக்கேல் கிளார்க் 275 பந்தைச் சந்தித்து 210 ரன்னை எடுத்தார்.இதில் 26 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் யாதவ் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 386 ரன் சேர்த்தனர். இது இந்திய அணிக்கு எதிராக புதிய சாதனையாகும். 

இருவரும் ஆட்டம் இழந்த பின்பு ஹஸ்சே ஆடினார். அவர் 33 பந்தில் 25 ரன்னை எடுத்தார். அடுத்து ஹாடின் 66 பந்தில் 42 ரன் எடுத்தார். 

இந்திய அணி சார்பில் வேகப் பந்து வீச்சாளர் ஜாஹிர்கான் 96 கன்னைத் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 194 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 -ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 21 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்னை எடுத்து இருந்தது. காம்பீர் 30 ரன்னுடனும், டெண்டுல்கர் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்