ரூ.130 கோடி மதிப்பிலான வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.17 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ரூ.130 கோடி மதிப்பிலான வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எ.முகம்மது ஜான் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் அன்று வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கோ.சந்தானம் முன்னிலை வகித்தார். முன்னதாக வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் ப.அப்துல் ராசிக் அனைவரையும் வரவேற்றார். ஆய்வின் போது அமைச்சர் உரையில் கடந்த ஜனவரி மாத ஆய்வுக் கூட்டத்தில் களப்பணியாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளின்படி செயல்பட்டு ஜனவரி மாதம் பெறப்பட்ட வக்ஃப் வாரிய சகாயத் தொகை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.40 இலட்சமாக உயர்ந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நிதியாண்டில் ஜனவரி 2011 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.2.67 கோடியாகும். நடப்பாண்டில் ஜனவரி 2012 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.267 கோடியாகும்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.30 இலட்சம் அதிகமாக சகாயத் தொகை பெறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இனி வரும் காலங்களிலும் இப்பணி தொய்வில்லாது தொடர்ந்து இலக்கினை அடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் உத்தரவின்படி வக்ஃபுச் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கோவையில் யாகூப் திவான் ஹைருத் இன்ஷாவலி அவுலியா தர்கா வக்ஃபுக்குச் சொந்தமான ரூ.5 கோடி பெறுமானமுள்ள 48 சென்ட் பரப்புள்ள சொத்து ஆக்கிரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி நவாப் கைருன்னிசா பேகம் சாஹிபா மற்றும்  பப்பு மஸ்தான் தர்கா வக்ஃபிற்குச் சொந்தமான சுமார் ரூ.105 கோடி மதிப்பிலான 35 கிரவுண்டு நிலத்தில் இருந்த  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மிட்கப்பட்டுள்ளது, மேலும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,சிறுவாடி பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமான, முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 10.85 ஏக்கர் பரப்புள்ள சொத்துகள் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சுமார் 130 கோடி ரூபாய் பெறுமான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமி ப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது . இந்த சொத்துகள் அனைத்தும் முதலமைச்சரின் உத்தரவின் பேரிலேயே மீட்கப்பட்டுள்ளது.  முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் வக்ஃப் சொத்துக்களை மீட்க  உறுதுணையாக இருந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட அலுவலர்களையும் பாரட்டுகிறேன் தொடர்ந்து இப்பணியில் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுகொள்கிறேன்.மேலும் வக்ஃப் வாரியத்தில்  இது நாள் வரை பதிவு செய்யப்படாத வக்ஃபுகளை பதிவு செய்ய உடன் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவும் புதியதாக துவங்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், வாரியத்தால் அங்கீகரப்படாத வக்ஃபின் நிர்வாக குழுக்களின் பட்டியல் எடுத்து வாரியத்தின் பார்வைக்குச் சமர்பிக்கவும் நிர்வாகக்குழு வாரியத்தின் அங்கீகாரம் பெறும் வகையிலும் செயல்பட வேண்டும் முறைகேடாக விற்கப்பட்ட வக்ஃப் சொத்தினை மீட்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வக்ஃப் சொத்துக்கள் - அவை வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாலும் பதிவு செய்யப்படவில்லா என்றாலும் அவை வக்ஃப் சோத்துக்களே. எனவே வக்ஃப்ச் சொத்துக்கள் எந்த காலத்தில் முறைகேடாக விற்கப்பட்டிருந்தாலும் அவை மீட்கப்படும். வக்ஃப் வாரியத்தின் அனுமதியின்றி பரிவர்த்தனை செய்யப்படும் வக்ஃப் சொத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, யாராவது வக்ஃப் சொத்துக்களை விற்கவோ, பரிபவர்த்தனை செய்ய முற்பட்டால் அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் வக்ஃப் வாரியத்தினுடைய தடையின்மைச் சான்று இல்லாமல் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மீண்டும் சார்பதிவாளர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி உலமாக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11,171 சைக்கிள்களில் இதுவரை 9,236 சைக்கிள்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.மீதமுள்ள 1, 935 சைக்கிள்களை இம்மாத இறுதிக்குள் வினியோகம் செய்ய வேண்டும். மேலும், வக்ஃப் சொத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருப்பின் அதனை பெற்று வாரியத்தில் சமர்பிக்க வேண்டும். வக்ஃப்க் சொத்துக்களுக்கு புதிய வாடகையின் நிர்ணயம் செய்து வக்ஃப்க் வருமானத்தை பெருக்க வேண்டும். வக்ஃபின் கணக்குகளை ஆய்வு செய்து, வாரியத்திற்கு முறையான கணக்குகளை சமர்பிக்க அறிவுறுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில்` தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை அளித்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் சீரிய தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு, வக்ஃப் சொத்துக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாவலராக விளங்கும் இந்த அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வக்ஃப் வாரியத்தின் சிறப்பான செயல்பாட்டினை உறுதி செய்வதோடு இந்த அரசுக்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: