முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

புதன்கிழமை, 18 ஜூன் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 19 - வெங்காயத்தின் விலை அதிகரிப்பதை தடுக்க அதன் குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 300 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.18 ஆயிரம்) மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிற வெங்காயத்தின் விலை ஏறுமுகம் காணத் தொடங்கி உள்ளது. தலைநகர் டெல்லியில் 15 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையில் விற்பனையானது. இப்போது விலை இரண்டு மடங்காகி ரூ.25 முதல் ரூ.30 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அந்த வகையில் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன் ஒன்றுக்கு 300 டாலர் என்று (சுமார் ரூ.18 ஆயிரம்) நிர்ணயித்தது. இதற்கான அறிவிப்பை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், "வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த அதற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 300 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த விலைக்கு குறைவான விலைக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளிக்காது.

இதுகுறித்து நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் கேசவ் டெசிராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்றுமதியை தடுக்கவும், உள்நாட்டு சப்ளையை அதிகரிக்கவும் வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 300 அமெரிக்க டாலராக ஆக்கப்பட்டுள்ளது. மேலும், "வெங்காய விலை ஏற்றம், அபாய மணி அடிக்கிற அளவுக்கு இல்லை. ஆனால் நாம் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் அரசு உஷாராக உள்ளது" என கூறினார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில், வெங்காயம் கிலோ ரூ.100ஐ எட்டியபோது குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 18 மில்லியன் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 13.58 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதியானது. இதற்கிடையில், உணவுப்பொருட்கள் பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்