முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் சகோதரர்களின் சொத்துக்கள் விரைவில் முடக்கம்!

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 12 - ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழும தலைவருமான கலாநிதி மாறன், அவரது நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருக்கும் இருவரின் குடும்பத்தினர் ஆகியோரின் ரூ. 742 கோடி அளவுக்கான சொத்துக்களை முடக்கி வைக்க மத்திய அமலாக்க துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்கு சொந்தமான ஏர்செல் தொலை தொடர்பு நிறுவன பங்குகளை 2006ல் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க அப்போது மத்தியில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐயிடம் 2011ல் புகார் அளித்தார். இந்த வழக்கில் 2011, அக்டோபரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரால்ப் மார்ஷல் மற்றும் சன்டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேசன், சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட்ஸ், ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியது.

ஏர்செல் நிறுவன பங்குகளை வாங்கியதற்கு கைமாறாக கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் பிரிட்டன், மொரீஷியஸ் நாடுகளில் உள்ள தனது துணை நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 549 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. அதே பிரிட்டன் நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் உள்ள தனது துணை நிறுவனம், ஒரு மென்பொருள் நிறுவனம் ஆகியவற்றின் மூலமும் சன் டைரக்ட் நிறுவனத்தில் கூடுதலாக சுமார் ரூ. 193 கோடியை முதலீடு செய்தது. ஆனால் இந்த முதலீடுகளுக்கு மத்திய நிதி துறையின் கீழ் உள்ள அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியம் விதிகளை மீறி அனுமதி அறித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதால் அது தொடர்பான சட்ட பிரிவின் கீழ் அமலாக்க துறை தனியாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள குடும்பத்தினர் ஆகியோரது சொத்துக்களில் ரூ. 742 கோடி அளவுக்கான சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அமலாக்க துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சன் டைரக்ட் நிறுவனத்தில் மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள மேக்ஸிஸ் சார்பு நிறுவனங்களின் முதலீட்டு விவரங்களை அலுவல்பூர்வமாக அனுப்பி வைக்குமாறு அந்நாடுகளின் அரசுக்கு மத்திய அமலாக்க துறை கடிதம் அனுப்பி உள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளிடையே பரஸ்பர வர்த்தக ஒத்துழைப்பும் நல்லுறவும் மேம்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இருநாடுகளுக்கும் அமலாக்க துறை கடிதம் அனுப்பி உள்ளது. அங்கிருந்து விரைவில் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் சொத்துக்களை முடக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!