8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள்: பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      அரசியல்
Pon Radhakrishanan 2018 11 21

நாகர்கோவில், சேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.சரவணன், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பன் ஆகியோரை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் இப்பகுதிக்கு மிகவும் அவசியமான திட்டமாகும். எனவே, நிலம் கையகப்படுத்தப்படும்போது, இப்போதுள்ள விலையை விட கூடுதலாக விலை கொடுத்து, நிலம் கையகப்படுத்தப்படும். மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு திட்டத்தைச் செயல்படுத்துவோம்'' என்றார்.  இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ''கன்னியாகுமரி தொகுதிக்கு பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது இங்குள்ள மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இப்படி பேசியுள்ளார்களா?

சென்னை- சேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும்போது யாரும் எதையும் தடை செய்யமுடியாது. சிலரின் தூண்டுதலால்தான் இந்த வழக்கு  தொடுக்கப்பட்டது. இதைத்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தெளிவாகக்  கூறினார்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து