முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரவாரிய வருவாயை பெருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 27 மே 2024      தமிழகம்
TTV 2023 01 20

சென்னை, மின்சாரவாரிய வருவாயை பெருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் உயரழுத்த மின்பிரிவில் இடம்பெறும் நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் 1.96 ரூபாயுடன் கூடுதலாக 34 காசுகள் வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் மின்சார வாரியம், உயர் அழுத்த மின் நுகர்வோர் தங்களின் தேவைக்காக வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு (221), மின்சார நிலைக் கட்டணம் ரத்து (222), உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முன்வராத தி.மு.க. அரசு, தன் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான விரோதப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் கடும் இன்னல்களுக்குள்ளாகி பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவு தொழில்துறையை முற்றிலுமாக முடக்கக்கூடிய செயலாகும்.

எனவே, மின்சாரச் சந்தையில் தொழில்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, குளறுபடிகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் மின்வாரியத்தை மறுசீரமைத்து வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து