முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.8 - தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக்குழு நேற்று உத்தரவிட்டது. மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக நடுவர்மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை அரசிதழில் இம்மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடுகிறதா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஆறுதல் கிடைத்துள்ளது. 

காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழகத்திற்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சுப்ரீம்கோர்ட்டில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், தமிழகத்தின் சார்பில் தனது வாதங்களை எடுத்து வைத்தார். சம்பா பயிர் கருகும் நிலையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கர்நாடகம் சார்பில் ஆஜரான் வழக்கறிஞர் அனில்திவான் தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 5-ம் தேதி அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நாளை வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்தார். அதே நாளில் விவசாயிகளுக்கு அடுக்கடுக்கான சலுகைகளையும் அவர் அறிவித்தார். இதையும் மீறி பயிர் இழப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 13 ஆயிரத்து 692 வரை நிவாரணம் அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். 

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்டு அத்தோடு நில்லாமல் கண்காணிப்புக்குழுவையும் உடனே கூட்டி இருமாநில தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவுப்படி காவரி கண்காணிப்புக்குழு டெல்லியில் நேற்று அதன் தலைவர் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில் தமிழகம் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தியது. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 36 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதன் பிறகு ஜனவரி மாதத்திற்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் ஆக மொத்தம் 43 டி.எம்.சி.தண்ணீரை தர வேண்டும் என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அரசு அதை நிராகரித்தது. இதையெல்லாம் மற்ற மாநிலங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டியிருந்தன. அதன் பிறகு கண்காணிப்புக்குழு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. மேலும் நடுவர்மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட இந்த மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில்தான் சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது நினைவிருக்கலாம். மேலும் கண்காணிப்புக்குழு உத்தரவுப்படி 12 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிடுகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை எல்லாம் தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருந்தாலும் இந்த தண்ணீரால் சம்பா பயிரை காப்பாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே. இதனிடையே காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் வரும் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதை உணர்ந்தோ என்னவோ கர்நாடக அரசு நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அவசர அவசரமாக தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. காலையில் தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் பிடிவாதமாக கூறினார். ஆனால் நள்ளிரவுக்கள் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு அணையின் ஷட்டர்களை திறந்துவிட்டுள்ளார் முதல்வர் ஷெட்டர். எப்படியோ தமிழகத்திற்குரிய தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்