முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் `நாகராஜ சோழன்-2'

புதன்கிழமை, 15 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.16 - ஏற்கனவே மணிவண்ணன்- சத்யராஜ் கூட்டணியில் வெளிவந்த அமைதிப்படை படத்தின் பாகம் 2 நாகராஜசோழன். அமைதிப்படையில் எம்.எல்.ஏ. ஆகும் அம்மாவாசை (சத்யராஜ்) நாகராஜசோழனில் தில்லாலங்கடி வேலை செய்து துணை முதல்வராகுகிறார். அதோடு மட்டுமல்லாமல் தன் மகனையும் கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சரவையில் பதவி வாங்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் துணை முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு காட்டில் வாழும் பழங்குடி இனத்தவரை வெளியேற்றிவிட்டு, அவர்கள் வாழும் நிலப்பகுதியில் வெளிநாட்டவர்கள் கம்பெனி கட்ட அனுமதி கொடுக்கிறார். 

ஆண்டாண்டு காலமாக வாழும் பழங்குடி இனத்தவர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். இதனால் காவல்துறைக்கும், அந்த மக்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பழங்குடி மக்களுக்கு ஆதரவாக சீமான் போர்க்குரல் கொடுக்கிறார். இந்நிலையில் நாகராஜசோழன் பல சூழ்ச்சிகள் செய்து மக்களை ஒடுக்கப்பார்க்கிறார். இது நடந்ததா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.  

சத்யராஜ்- மணிவண்ணன் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம், முன்பு அந்த அமைதிப்படை ஸ்டைல், நடை, உடை, பாவனை, கோயம்புத்தூர் பேச்சு வழக்கு போன்றவை இந்தப் படத்திலும் அருமையாக பொருந்தியிருக்கிறது. சத்யராஜ் தோற்றம் தொய்வை ஏற்படுத்தினாலும், வசன உச்சரிப்பு மிரட்டுகிறது. இப்போது உள்ள அரசியல் கட்சிகளை பாரபட்சம் இல்லாமல் இயக்குனர் மணிவண்ணன் அவருக்கே உரிய ஸ்டைலில் சாடியிருக்கிறார். சத்யராஜ் உதவியாளராக வரும் மணிவண்ணனின் நக்கல் நயாண்டிதனம் சிரிக்க வைக்கிறது. கூடவே அவர் பேசும் இரட்டை அர்த்த வசனம் இந்த வயதில் தேவையா என்று தோன்றுகிறது. 

சத்யராஜ் மகனாக வரும் ரகுவண்ணன் நடிப்பில் பக்குவப்பட்டிருக்கிறார். சீமானின் நடிப்பில் சமூக வசனங்கள் சாட்டையடி. தோற்றத்தில் கம்பீரம் குறையவில்லை. நடிகைகளாக வரும் கோமல்ஷர்மா, மிருதுளா கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறார்கள். கவர்ச்சியில்  விளையாடி உள்ளனர். 

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி பின்னியிருக்கிறார். ஒளிப்பதிவு டி.சங்கர். காட்சிகள் மிளிர வைக்கிறது. ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பு கோர்வை. பாடல்கள் நா.முத்துகுமார். தயாரிப்பு- சுரேஷ் காமாட்சி, எஸ்.ரவிச்சந்திரன். வெளியீடு வி.கெளஸ் புரொடக்ஷன் சார்பில் டாக்டர் ராமதாஸ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- மணிவண்ணன், நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., நிகழ்கால மக்களோடு ஒன்றிப் போயிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்