முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமுறைகளுக்கு உட்பட்டே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.5 - விதிமுறைகளுக்கு உட்பட்டே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் போல்தான் தமிழகத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பிரவீண்குமார் தலைமையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பிரவீண் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சட்டப் பேரவை தேர்தலில் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்துக்கு அடிப்படையில் என்ன விதிமுறைகள் உள்ளனவோ, அந்த விதிமுறைகளை மட்டுமே தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல், அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேவையை பொறுத்து தேர்தல் விதிமுறைகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் விதிமுறை மீறல் குறித்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதன் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாயின என்ற விவரம் தெரியவில்லை. 

தமிழகத்தில் மொத்தம் 62 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் சுவற்றில் கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் எழுதுவது போன்றவையாகும். பணப்பட்டுவாடா குறித்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 330 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 296 வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

தபால் வாக்குகளுக்கும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே என்று கேட்கிறீர்கள். இது குறித்து எங்களுக்கு எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை. இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும். அவ்வாறு தபால் வாக்குக்காக பணம் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதில் ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. போலீசார் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் சரிவர கிடைக்கவில்லை என்றும் சிலர் புகார் எழுப்பியுள்ளனர். 

கடைசி தேதி வரை சம்பந்தப்பட்ட படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவரும் பட்சத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படும். தமிழகத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற இடைத் தேர்தலை விட தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடைத் தேர்தலின் போது வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் கட்சியினர் மறைமுகமாகத்தான் பணமப்பட்டுவாடா செய்தனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்