முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவர் மரணம்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.-18 -  பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பாதாள அறைகளை திறக்க வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் நேற்று திடீரென்று மரணமடைந்தார். 

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலை திருவாங்கூர் மகாராஜா குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும் கோயிலை அவர்களது பரம்பரையினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோயிலில் 6 பாதாள அறைகள் இருக்கிறது என்றும் அதில் தங்க புதையில் இருக்கிறது என்றும் அதனால் அந்த பாதாள அறைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கிறிஞர் சுந்தரராஜன் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு பாதாள அறைகளை திறக்க உத்தரவிட்டது. மேலும் அந்த பாதாள அறையை திறக்க நியமிக்கப்பட்ட குழுவில் வழக்கறிஞர் சுந்தரராஜனும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பாதாள அறைகளை திறந்து பார்த்ததில் அங்கு தங்க நகைகள், வைர நகைகள்,வைடூரிய நகைகள், மரகதம் மற்றும் பொக்கிஷங்கள் விலை உயர்ந்த கலைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மீதமுள்ள 6-வது அறையை திறக்க கோயிலை நிர்வகித்து வருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் 6-வது அறையை திறக்கக்கூடாது என்றும் அப்படி திறந்தால் அது நாட்டுக்கு நல்லது அல்ல என்றும் அதனால்தான் அறையின் கதவில் பாம்பு படம் வரையப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு 6-வது அறையை மட்டும் திறக்க இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில் பாதாள அறைகளை திறக்கக்கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சுந்தரராஜன், நேற்று திடீரென்று மரணமடைந்துவிட்டார். அவருக்கு வயது 70. வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரமாச்சாரியாகவே வாழ்ந்து வந்தார். இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரமாகும். இவரது மூதாதையர்கள் திருவனந்தபுரத்தில் குடியேறிவிட்டனர். கடந்த 1964-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக கேரள மாநிலத்தில் இருந்து தேர்வு பெற்றார். மத்திய அரசின் உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர்.  சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். இவரது சாவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்