முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.30 - அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளைவிட இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகமாம். அதிகபட்ச வரிகள் விதிக்கப்படுவதால் இவ்வாறு இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் இத்தகவலை தெரிவித்தார். அவரது தகவலின்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.66.42 காசுகள். ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 44.88 காசுகள் என்று மத்திய அமைச்சர் சிங் தெரிவித்தார். கடந்த நவம்பர் 16ம் தேதியன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2.22 பைசா குறைக்கப்பட்டது. அப்படி குறைக்கப்பட்ட பிறகும்கூட டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 66.42 பைசாதான். ஆனால் பாகிஸ்தானிலோ ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 48.64 காசுக்கு விற்கப்படுகிறது. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 61.38 காசு. வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 52.42 காசு. நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 65.26 காசுகள். இத்தனைக்கும் நேபாளத்தில் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் கூட இல்லை. எல்லாவற்றையுமே இந்தியாவில் இருந்துதான் நேபாளம் இறக்குமதி செய்கிறது. அப்படியிருந்தும் அங்கு  நம்மைவிட பெட்ரோல் விலை குறைவு. ஐக்கிய அரபு நாடுகளிலும் பெட்ரோல்விலை குறைவாகவே விற்கப்படுகிறது. காரணம் பெட்ரோல் கிடைப்பதே அங்குதான். இருந்தாலும் ஒரு விஷயத்தில் நாம் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். இந்தியாவை விட ஐரோப்பாவில் பெட்ரோல் விலை அதிகமாம். லண்டனில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 104.60 காசுகள். அந்த வகையில் நாம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்