முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு பிரதமரிடம் மகஜர்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, டிச.3 - மக்கள் மத்தியில் அபரிமிதமான அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் டேம் 999 படத்திற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் மற்றும் முல்லைப்பெரியாறு அணை நன்றாகவே உள்ளது. எனவே புதிய அணைகட்டும் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை, மு.தம்பிதுரை தலைமையிலான அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்து மகஜர் ஒன்றை அளித்தது.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணை 1886 ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்டது. இந்த அணை தமிழ்நாட்டில் வறட்சி மாவட்டங்களாக கருதப்படும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் 2.20 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு உதவுவதாக அமைந்துள்ளது. 2006 ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு அந்த உத்தரவில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த அணையில் 142 அடிவரை தண்ணீரை தேக்கிவைத்துக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு அந்த உத்தரவை மதித்ததாக தெரியவில்லை. கேரள அரசின் சமீபத்திய செயல்களும் புதிய அணை கட்டுவதையே வலியுறுத்துவதுபோல் அமைந்துள்ளது. காரணம் இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று அது கூறுகிறது. இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதற்கு சமமாகும். இந்த விஷயத்தில் கேரள அரசின் தன்னிச்சையான நிலையை தமிழக அரசு பலமுறை வன்மையாக கண்டித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 23.11.2011 மற்றும் 29.11.2011 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதியுள்ளார். அதில் பிரதமர் தனது பதவியைப்  பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்படுமாறு கேரள அரசுக்கு அறிவுரை கூறவேண்டும் என்று  முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1886 ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உரிமை உள்ளது.  தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள், உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.  அதை கேரள அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் அதில் குறிப்பிட்டிருந்தார். முதல்வர் அனுப்பிய கடிதங்களின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளோம். 1979 ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு பிரச்சனை எழுப்பியபோது மத்திய நீர்வள கமிஷனின் அப்போதைய தலைவர் டாக்டர் கே.சி.தாமஸ், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டார். அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிய அவர், அணையை பலப்படுத்துவதற்கான சில நடவடிக்கைகள் பற்றிய யோசனைகளை தெரிவித்தார். அப்படி செய்தால் அணை நவீன தரத்திற்கு வந்துவிடும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். அதை தமிழக அரசும் மேற்கொண்டது. 

இந்த நடவடிக்கைகளை எடுத்த பிறகு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. அது நன்றாக புதிய அணைபோலவே செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் 1730 ல் கட்டப்பட்ட ஜெய்சம்மான்ட் அணை போன்று அடிப்படையில் ஸ்திரமாக உள்ளது என்றும் தாமஸ் கூறியுள்ளார். 2001-ம் ஆண்டில் இந்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழுவின் அறிக்கைப்படியும் அணை பாதுகாப்பாகவே உள்ளது. அணையின் நீர்மட்டத்தை ஆரம்பத்தில் 142 அடிவரையும், பிறகு 152 அடி வரையும் உயர்த்திக்கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டது. நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை பார்த்த சுப்ரீம் கோர்ட்டு, 27.2.2006 ல் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதிலும் முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. மொத்தத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவே சுப்ரீம் கோர்ட்டு அன்றைய தினம் கூறியது. ஆனால் கேரள அரசோ இந்த உத்தரவையே செல்லாததாக ஆக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தது. இதை எதிர்த்தும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. 

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு பற்றி கேரள அரசு மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. அதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதற்காக சில தகவல்களையும் முன்வைக்க வேண்டியதும் எங்கள் கடமை. கேரள அரசின் கூற்றுப்படி புதிய அணைகட்ட தேவையே இல்லை. காரணம் அது நன்றாகவே செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அணையின் பாதுகாப்பு பற்றி எங்களுக்கும் கவலை உண்டு. கடந்த 15 நாட்களில் 22 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தவே இவ்வாறு வேண்டுமென்றே அந்த அரசு கூறுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த நடப்பாண்டில் வெறும் 4 முறைதான் நில அதிர்வுகள் அதுவும் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு கூறுகிறது. டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த தகவலை கேரள அரசு கூறுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டு தவறானது. காரணம் மத்திய நீர்வள கமிஷன் இந்த பிரச்சனை முழுவதையுமே ஆய்வு செய்துவிட்டது. அதுபற்றிய தகவல் நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எந்த ஆதாரத்தையும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில்  இதுவரை அளிக்கவில்லை. 

இப்போது ஒரு புதிய பிரச்சனை தோன்றியுள்ளது. டேம் 999 என்ற படம் கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திவிட்டது. அதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் இந்த படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த படம் கேரள மாநிலம் உள்பட இதர மாநிலங்களில் திரையிடப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை தூண்டவேண்டும் என்பதற்காகவே இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை என்று வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகவே இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. எனவே இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த அணை பாதுகாப்பாக இல்லை எனவே அதற்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவதுதான் என்று கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கூறிவருகிறது. தமிழ்நாடு போக்குவரத்து கழக பஸ்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. சூறையாடல் சம்பவங்களும் நடக்கிறது. தமிழக எல்லையில் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழக மக்கள் பொறுமை காத்து வருகிறார்கள். இந்த அணை பாதுகாப்பாகவே உள்ளது என்பது கேரள அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். கேரள  அமைச்சர்களும், அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாகவே பேட்டி கொடுத்து வருகிறார்கள். அணை பாதுகாப்பாக இல்லை என்பதை நிரூபிக்க அவர்களிடம் விஞ்ஞானப் பூர்வமான விபரங்கள் எதுவும் இல்லை. எனவே கேரள அரசு பரப்புவது வெறும் வதந்திதான். அவர்களுடைய நடவடிக்கைகள் இரு மாநில மக்களின் நன்மை கருதி செய்யப்படுவதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசின் சார்பாக, தமிழக மக்கள் சார்பாக நாங்கள் பிரதமரிடம் சில கோரிக்கைகளை வைக்கிறோம். மக்கள் மத்தியில் பீதியையும், அபரிமிதமான அச்சத்தையும் ஏற்படுத்தும் டேம் 999 படத்திற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும். 1886 ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாத உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து 1970 ல் ஏற்பட்ட துணை ஒப்பந்தத்தையும் அவர்கள் செயல்படுத்த வேண்டும். 27.2.2006 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும். புதிய அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும். காரணம் இப்போதுள்ள அணை நன்றாகவே உள்ளது. மேலும் ஒட்டுமொத்த பிரச்சனையும் சுப்ரீம் கோர்ட்டின் முன்பு நிலுவையில் உள்ளது. எனவே இரு மாநில மக்களின் நன்மை கருதி, சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் வரை  மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் கேரள சட்டமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து இயற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறச் செய்ய வேண்டும்.  பிரச்சனைகளை கேரள அரசு  தூண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரு மாநில மக்களின் நலனையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரிடம் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்