முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே முதன் முதலாக அனைத்து இடங்களிலும் தங்கம் ஜொலிக்கும் ஹோட்டல் எது தெரியுமா?

அந்த ஹோட்டலில் எங்கு திரும்பினாலும் தங்கம் ஜொலிக்கிறது. அதன் சுவர்கள், கைப்பிடிகள், கதவுகள் அவ்வளவு ஏன் நீச்சல் குளம், பாத்டப், வாஷ்பேஷின் கூட தங்கத்தால் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. அது இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா... வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில்தான். 5 நட்சத்திர ஹோட்டலான இதில் அனைத்து இடங்களிலும் 24 காரட் தங்கம் ஜொலிக்கிறது.  இதன் மொத்த கட்டுமான செலவு மட்டும் ரூ.1512 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...உண்மையிலேயே சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணுகிற அளவுக்கு ஜொலிக்கிறது. தங்கம் பதிக்கப்பட்ட உலகின் முதல் ஹோட்டல் என்ற பெருமையையும் இந்த ஹோட்டல் பெற்றுள்ளது. உலகமே கொரோனா கட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று கதறிக் கொண்டிருந்த 2020 ஆண்டில் ஜூலை மாதம் தான் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது என்பது ஆச்சரியம் தானே..

ரூ.30 கோடி மதிப்புள்ள வீடு இலவசம்

30 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இலவசமாக கிடைக்கிறது என்றால் ஆச்சரியம் தானே.. ஆனால் வீடு இருப்பது இங்கிலாந்தில். சரி இந்த வீட்டில் அப்படி என்ன விசேசம். அதை கூறினால் பட்டியலிட முடியாத அளவுக்கு அத்தனை வசதிகளும் உள்ளன. இங்கிலாந்தின் லேக் மாவட்டத்தில் (Lake District) அமைந்துள்ள இந்த வீட்டிலிருந்து புகழ்பெற்ற வின்டர்மீரைப் (Windermere of England) பார்க்க முடியும். இந்த வீட்டில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. இந்த ஆடம்பர வீட்டில் வீட்டில் சினிமா போன்ற பல ஆடம்பர வசதிகளும் உள்ளன. இந்த வீட்டின் விலை 3 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்திய ரூபாயில் வீட்டின் விலை (30,15,93,238) 30 கோடியே 15 லட்சத்து 93 ஆயிரத்து 238 ரூபாய். ஒமேஸ் மில்லியன் பவுண்ட் ஹவுஸ் டிரா என்ற நிறுவனம் தான் அல்ஜீமர் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக 10 பவுண்டுகள் அதாவது நம்மூர் மதிப்பில் ரூ. ஆயிரத்தில் குலுக்கல் ஒன்றை நடத்துகிறது. அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்குத்தான் இந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வீடு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை வாங்குபவர்களுக்கு பத்திர கட்டணம், பதிவு கட்டணம், வரி என சகல சலுகைகளும் இலவசம் என்று அறிவித்துள்ளது. என்ன நீங்கள் கலந்து கொள்ள தயாரா

இரவில் மனிதர்களை போலவே தூங்கும் தாவரங்கள் - ஆய்வில் ருசிகர தகவல்

பின்லாந்தை சேர்ந்த பின்னிஸ் ஜியோஸ்பாசியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பினர், பின்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் தாவரங்களை ஆராய்ச்சி செய்தனர். லேசர் ஸ்கேனிங் முறையில் இரவு நேரத்தில் தாவரங்களில் நிகழும் மாற்றத்தை அவர்கள் கணக்கிட்டனர். அதில் தாவரங்கள் மனிதர்கள்போலவே இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வதாகவும், அது அவைகளின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா உயிரினங்களைப் போலவே தாவரங்களின் வளர்ச்சியிலும், முக்கிய மாற்றங்களிலும் தூக்கம் பங்கு வகிப்பது தெளிவாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

4 செமீ அகலமே கொண்ட உலகின் மிகவும் ஒல்லியான நதி

உலகின் மிகப் பெரிய நதி அமேசான். இது பல கண்டங்களை கடந்து செல்கிறது.  அதன் அகலம் மட்டும் சுமார் 6 மைல்கள். மழைக்காலங்களில் சில சமயம் 24 மைல்கள் வரை அகன்று பரந்து விரிந்திருக்கும். ஆனால் அதற்கு எதிர்மாறாக உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி எங்கே ஓடுகிறது தெரியுமா? சீனாவில். சீனாவின் வடக்கு பகுதியில் உள்புற மங்கோலியாவில் ஓடும் ஹூவாலாய் நதிதான் உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி. சுமார் 17 கிமீக்கும் அதிகமான தொலைவை கடந்து செல்லும் இந்த நதியின் அகலம் வெறும் 15 செமீ. ஒரு சில இடங்களில் இதன் அகலம் வெறும் 4 செமீ. ஒரே எட்டில் நாம் அதை தாண்டி விடலாம். ஒல்லியாக இருப்பதால் அது மற்ற நதிகளை காட்டிலும் ஓட்டத்திலும், பாய்ச்சலிலும் எந்த குறைவும் இல்லை என்பது ஆச்சரியம் தானே.

வைத்தியம் எளிது

மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளை சர் செய்யலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுத்து, 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகும்.

கதிர்வீச்சு தன்மை கொண்டவை வாழைப்பழங்கள்

அறிவியல் எப்போதும் ஆச்சரியம் மிக்கவையே. அதிலும் நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் பல்வேறு அறிவியல் அதிசயங்களை தெரியாமலேயே நாம் அவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழங்கள். அதில் என்ன அதிசயம் என்கிறீர்களா.. வாழைப்பழங்களுக்கு கதிர்வீசும் தன்மை கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதன் அளவு மிகமிகமிக குறைவுதான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே சமயத்தில் உங்களால் 10 மில்லியன் வாழைப்பழங்களை சாப்பிட முடிந்தால் மட்டுமே அதன் கதிர்வீச்சு உங்களை பாதிக்கும் என்கிறார் மெக்ஹில் பல்கலை கழக ஆய்வாளர் ஜோ ஸ்வார்க்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!