முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை தகர்க்க சதி - வெடி குண்டுகளுடன் சிக்கிய கார்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

அம்பாலா, அக். 14 - டெல்லியில் கடந்த மாதம் 7 ம் தேதி ஐகோர்ட் முன்பு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் நடத்திய அந்த நாசவேலையில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் மீண்டும் நாசவேலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதனால் டெல்லியில் முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலில் அரியானா மாநிலம் அம்பாலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு நீல நிற காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன. பெரிய நாசவேலைக்கு அவை பயன்படுத்தப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரகசிய தகவலை கேட்டதும் டெல்லி போலீசார் உஷாராகினர். உடனே இது குறித்து அரியானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர். 

இதற்கிடையே வெடிகுண்டு கார் பற்றிய தகவல் அறிந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அம்பாலா நோக்கி விரைந்தனர். அவர்களும் அரியானா போலீசாரும் ஒருங்கிணைந்து சிறு சிறு குழுக்களாக அம்பாலா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வெளியில் பார்க்கிங் பகுதியில் உளவுத் துறை தெரிவித்த நீல நிற கார் இருப்பதை கண்டனர். எச். ஆர். 030054 என்ற எண் கொண்ட அந்த கார்தான் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். 

மாலை 6.30 மணி முதல் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆங்காங்கே நின்று காரை கண்காணித்தனர். காரை நிறுத்தி சென்ற தீவிரவாதிகள் மீண்டும் காரை எடுக்க வரும் போது கைது செய்யலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை யாருமே வரவில்லை. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த காரை கைப்பற்றினர். காரை திறந்து பார்த்த போது உள்ளே 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து, 5 டெட்டனேட்டர்கள், குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்யும் 2 டைமர்கள், 2 பேட்டரிகள் மற்றும் ஒரு காகித பொட்டலத்தில் ரசாயன கலவைகள் ஆகியவை இருந்தன. 

அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் அவை தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. காரில் இருந்த வெடி பொருட்கள் மிகப் பெரிய நாசத்தை உண்டாக்க முடியும். அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க அந்த காரில் குண்டுகள் எடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் காரில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் குண்டு வடிவில் மாற்றப்படாமல் இருந்தது. மேலும் டெட்டனேட்டர், டைமர் இணைப்புடன் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. இதன் மூலம் அந்த வெடி பொருட்கள் அம்பாலா ரயில் நிலையத்தை தகர்க்க எடுத்து வரப்படவில்லை எனத் தெரிகிறது. 

அந்த காரில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஒரு இனிப்பு கடையில் வாங்கிய பொட்டலம் இருந்தது. மேலும் வெடி பொருட்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும் குறிப்புகளும், 2 காஷ்மீர் மாநில நாளிதழ்களும் இருந்தன. இதனால் டெல்லியை தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களை தீவிரவாதிகள் அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த குண்டை வெடிக்க செய்து பெரிய நாச வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அந்த கார் வந்ததற்கான அடையாளங்கள் தெரியவந்தன. இதையடுத்து அரியானா, பஞ்சாபில் உள்ள டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  எனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 6 பேர் அந்த காரில் வந்ததாக அரியானா மாநில போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து இந்த நாசவேலையில் ஈடுபட முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 

சரியான நேரத்தில் தகவல் வந்ததால் மிகப் பெரிய நாசவேலை திட்டத்தை முறியடித்துள்ளதாக அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. ரஞ்சீவ்தலால் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், அம்பாலா நகரில் உள்ள ராணுவ முகாமை தகர்க்க இந்த வெடிபொருட்களை கொண்டு வந்திருக்கலாம். உண்மையை கண்டறிய எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்