முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி யோசனை

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 1 - சுப்ரீம் கோர்ட்டில் தினமும் 900 கார்களால் இட நெருக்கடி ஏற்படுவதால் சைக்கிளை பயன்படுத்த தலைமை நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள், வழக்கு விசாரணைக்கு வரும் பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கார்களை பயன்படுத்துகிறார்கள். கார்களை நிறுத்துவதற்கு என்றே சுப்ரீம் கோர்ட்டில் தனியாக பார்க்கிங் வசதி உள்ளது. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தினமும் 900 கார்கள் நிறுத்தப்படுவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. கோர்ட் முடிந்து அனைவரும் கிளம்பும் போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில சமயம் நீதிபதிகளின் கார்களும் நெருக்கடியில் சிக்கி கொள்கிறது. வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாகன நெருக்கடி பிரச்சினையை தீர்க்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இது பற்றி சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் கூறுகையில், தினந்தோறும் இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றார்.

உடனே தலைமை நீதிபதி லோதா குறுக்கிட்டு அப்படியானால் கார்களின் எண்ணிக்கையை குறைக்காதது ஏன்? சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையுமே என்றார். சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும் போது, தினமும் 900 கார்கள் நிறுத்தப்படுவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. கோர்ட்டுக்கு வரும் அனைவருமே கார்களில் தான் வருகிறார்கள் என்றார். இதையடுத்து வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் என அனைவரும் சைக்கிளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே என்று கூறிய தலைமை நீதிபதி லோதா, இந்த விஷயத்தில் நீங்கள் உதவ வேண்டும். இதை அவசர பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்