முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி: சென்னையில் 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 25 – விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 1800 இடங்களில் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் தான் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. புதிதாக சிலைகளை நிறுவுவதற்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நேரில் வந்து புகார் மனு அளித்தனர். அப்போது புதிதாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருவதாகவும் இதனை இந்த ஆண்டு தவிர்க்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தனர்.

சென்னையில் ஒரு சில இடங்களில் இப்போதே விநாயகர் சிலைகளை நிறுவும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி தினமான வருகிற 29–ந்தேதி இந்த சிலைகள் அனைத்துக்கும் பூஜைகள் செய்யப்படும். பின்னர் 1 வாரம் கழித்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

இந்து முன்னணி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ராமகோபாலன் பங்கேற்கும் ஊர்வலத்தில் ஏராளமான சிலைகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். இந்த முறையும் ராமகோபாலன் பங்கேற்கும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தனித் தனியாக நடத்தப்படும். இந்த ஊர்வலம் பாதையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து சென்னை மாநகர போலீசார் கடந்த 1 வாரமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், பெசன்ட்நகர் ஆகிய 3 இடங்களில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும். பட்டினப்பாக்கத்தில் ஏராளமான சிலைகள் கரைக்கப்படுவது உண்டு. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் தினத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற 29–ந்தேதியில் இருந்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும் நாள் வரை 1 வார காலத்துக்கு 12 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் விநாயகர் சிலை விழாக் கமிட்டியினர் மற்றும் இந்து அமைப்புகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று (25–ந்தேதி) ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கமிஷனர்கள் ஆபாஷ்குமார், கருணாசாகர் ஆகியோர் இணைந்து இக்கூட்டத்தை நடத்துகிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் கூடுதலான இடங்களில் சிலைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்த உள்ளனர். இது பற்றி போலீசார் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாக் கமிட்டியினருக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்குகிறார்கள். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் விழாக் கமிட்டியை சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும். சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒலி பெருக்கிகளில் பேசக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலைகளுக்கு அருகில் வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீசாரும் ரோந்து சுற்றி வருவார்கள். நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பின்னர் விழாக் கமிட்டியினர் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் பற்றி போலீசார் விரிவாக அறிவிப்பார்கள்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கடந்த ஆண்டு வடசென்னை பகுதியில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதே போன்று இந்த ஆண்டு எந்த வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று துணை கமிஷனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடியே கமிஷனர் ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்க்கும் வகையில் சிறப்பு கேமரா வசதிகளும் செய்யப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்