முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு வழக்கு: முன்ஜாமீன் கேட்டு அழகிரி மனு

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 29 - கோவில் இடம் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாக மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டதால் மதுரை ஐகோர்ட் கிளையில் மு.க. அழகிரி முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் தயா என்ஜீனியரிங் கல்லூரியை மு.க. அழகிரி கட்டியுள்ளார். அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த இன்ஜீனியரிங் கல்லூரியை கட்டுவதற்காக அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 44 செண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாகவும் இந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு கொடுத்தார். இது பற்றி விசாரணை நடத்தும்படி அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையொட்டி அறநிலையத்துறை துணை கமிஷனர் சுரேந்திரன், உதவி கமிஷனர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் கடந்த ஜூன் மாதம் சிவரக்கோட்டைக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சர்வேயர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் இடம் அளவீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர். இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த ஆய்வு பற்றிய அறிக்கையினை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மதுரை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் மு.க. அழகிரி மீது நில அபகரிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த நில அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மு.க. அழகிரி நேற்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை மு.க. அழகிரியின் சார்பில் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம் இருந்த போது இதே விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில், மு.க. அழகிரி கட்டியுள்ள தயா கல்லூரி வளாகத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்களாக கட்டப்பட்டு உள்ளது. இதனை அகற்றி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை ஐகோர்ட் கிளையில் நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்