முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி வரும் ஆட்டங்களில் மெக்கல்லம் விளையாட மாட்டார்: கேப்டன் டோணி பேட்டி

திங்கட்கிழமை, 11 மே 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - ஐ.பி.எல். 8வது போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 8-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்-கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித், மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரை கிறிஸ் மொரிஸ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரன்டன் மெக்கல்லம் அணியின் முதல் பவுண்டரியை விரட்டினார்.  2-வது ஓவரில் வெய்ன் ஸ்மித் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்த ஓவரில் மற்றொரு முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, கிறிஸ் மொரிஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி நடையைக் கட்டினார்.

15 ரன்களுக்குள் சென்னை அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு உள்ளானது. விக்கெட் சரிவை பொருட்படுத்தாமல் தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். பிரவின் தாம்பே வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட பிரன்டன் மெக்கல்லம், பவுல்க்னெர் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசினார்.நிலைத்து நின்று ஆடிய மெக்கல்லம் கிறிஸ் மொரிஸ் பந்து வீச்சை அடித்து ஆட முயல அது பவுண்டரி எல்லையில் நின்ற அங்கித் சர்மா கையில் தஞ்சம் அடைந்தது. பிரன்டன் மெக்கல்லம் 61 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களம் கண்ட பவான் நெகி 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் டோணி 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்னும், வெய்ன் பிராவோ 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக ராஜஸ்தான் தரப்பில் வாட்சன் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் 26 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியிம் ஜடேஜா 4 விக்கெட்களையும், மோகித் சர்மா 3 விக்கெட்டையும், பிராவோ 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 2-வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

அதேநேரத்தில் ஏற்கெனவே ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி கூறியதாவது:மேக்குல்லமின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 6 ஓவரில் அதிரடியாக விளையாடும் அவர் இனி வரும் ஆட்டங்களில் விளையாடாமல் போவது எங்கள் அணிக்கு இழப்பே. வீரர்களின் அறையில் அவர் எப்போதுமே நகைச்சுவையாக பேசிக்கொண்டு இருப்பார். மேக்குல்லம் இடத்தில் மைக் ஹஸ்சி விளையாடுவார். அவரும் சிறந்த பேட்ஸ்மேன் அவார்கள். ஜடேஜாவும், நெகியும் சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் அஸ்வினை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மேலும் வேகப்பந்து வீரர்களும் நன்றாக வீசினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து