தெலுங்கானாவிலும் ஒரு ‘சுவாதி’ : ஒருதலை காதலால் கழுத்தை அறுத்துக் கொன்ற மாணவர்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2016      இந்தியா
swathi 2016 07 03

ஹைதராபாத் : தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவரது வீட்டு வாசலிலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்த கல்லூரி மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்தமாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாதியைக் கொலை செய்த ராம்குமாரை செங்கோட்டை அருகே போலீசார் கைது செய்துள்ளனர். காதலிக்க மறுத்ததால் சுவாதியை ராம்குமார் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே தெலுங்கானாவிலும் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் ஒருவர் வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சருபாய் என்பவரது மகள் சந்தியா (18). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சந்தியாவை கடந்த ஓராண்டாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை சந்தியா ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து சந்தியாவைக் காதலிக்கும்படி நச்சரித்து வந்துள்ளார் மகேஷ்.

இந்நிலையில், சந்தியாவிற்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மதியம் காய்கறி வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்குச் சென்ற சந்தியாவிடம் அவர் தன் காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அப்போதும் மகேஷின் காதலை ஏற்க சந்தியா மறுத்துள்ளார். கூடவே, ‘தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதால், தன் பின்னால் சுற்ற வேண்டாம்' என்றும் அவர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், சந்தியாவைப் பின் தொடர்ந்து அவரது வீட்டு வாசலில் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சந்தியாவின் தாய் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தலைமறைவாக இருந்த மகேஷைத் தேடி வந்தனர்.

பின்னர் மகேஷ் போலீசில் சரணடைந்தார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலிக்க மறுத்ததால் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: