முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது முறையாக அணு ஆயுத பரிசோதனை: வடகொரியாவுக்கு பான் கி மூன் கடும் கண்டனம்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - சர்வதேச விதிமுறைகளை மீறிய வகையில் ஐந்தாவது முறையாக அணு ஆயுத பரிசோதனை நடத்திய வடகொரியாவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அந்நாட்டின்  மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி வடகொரியா இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன. இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது. அந்தவகையில், புங்யே-ரி பகுதியில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் காலை சுமார் 6 மணியளவில் வடகொரியா சக்திவாய்ந்த அணு குண்டை மீண்டும் பரிசோதித்துள்ளதாக தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புவிசார் கண்காணிப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.

இந்த அணுகுண்டு பரிசோதனையின் விளைவாக வடகொரியாவின் பல பகுதிகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தாக்கத்தை வைத்து கணக்கிடுகையில் 20 முதல் 30 மெட்ரிக் டன் சக்திகொண்ட அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை நடத்திய அணு ஆயுத சோதனைகளிலேயே இதுதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடகொரியா அணு ஆயுத சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இதற் கிடையில், ஐ.நா. விதிமுறைகளை பின்பற்றாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ’வடகொரியா மறைமுகமாக நடத்திய அணு ஆயுத பரிசோதனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் இதுவரை ஐந்துமுறை வடகொரியா இதுபோன்று அத்துமீறலாக அணு ஆயுத பரிசோதனைகளை தொடர்ந்து நடத்தியுள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையும், அணு ஆயுத பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச விதிமுறைகளையும் மீறும் செயலாகும்’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக்கொள்ளவே முடியாத இதுபோன்ற ஆபத்தான செயல்பாடுகள், கிழக்காசிய கண்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைவதுடன், அணு வல்லமையை நிரூபிக்கும் இதுபோன்ற பரிசோதனைகளை தடுக்கும் சர்வதேச அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதையும் காட்டுகிறது.

இதுபோல் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளை நாம் உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். இந்த அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.  ஐ.நா.சபையின் செயலாளர் என்ற முறையில் கடந்த பத்தாண்டுகளாக வடகொரியா விவகாரத்தில் மாற்றம் ஏற்பட என்னால் இயன்றதை செய்துள்ளேன். எனினும், அந்தநாடு இதைப்போல் நடந்துகொள்வது ஏன்? என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

கொரியா பிராந்தியத்தில் நிலவிவரும் தற்கால சூழலை முன்வைத்து, உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் சர்வதேச சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பை என்னால் சரிவர செய்ய முடியவில்லையோ? என்றே நான் கருதுகிறேன். இதற்காக வருத்தப்படுகிறேன். கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதிப்பதை விட்டுவிட்டு அந்நாட்டு மக்களின் நல்வாழ்வு தொடர்பான நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட வேண்டும்’ எனவும் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago