முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.கலெக்டர்தகவல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது  கூறியதாவது-

பருவமழை பொய்த்து போனதால் பவானிசாகர் அணையில் நடப்பு ஆண்டில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. எனவே ஈரோட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவானி அணையில் தண்ணீர் இல்லாததால் பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.

கசிவுநீர் திட்டம்

 திருப்பூரில் நாட்டு மாடுகளை விற்பனை செய்ய தனியாக மாட்டுச்சந்தை செயல்படுவது போல் ஈரோட்டிலும் நாட்டு மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பிரதான பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது வங்கிகளில் பிரதான பயிருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பிரதான பயிருடன் சேர்த்து ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல், தரம் சோதித்தல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உள்ள குழப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 37 கசிவுநீர் திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கசிவுநீர் திட்டத்தை தூர்வார சமூக அமைப்பு ஒன்று தயாராக உள்ளது. எனவே கசிவுநீர் திட்டங்களை விவசாயிகள் நிதி பங்களிப்புடன் சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

நதிகள் இணைப்பு

 பணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்களை பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தேசிய நீர்வழி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அதன்படி 106 ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 6 நதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும், காவிரி ஆறும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.

4 வழிச்சாலை

 சித்தோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின்படி சிற்றூர்களில் 110 அடி, பேரூராட்சிகளில் 100 அடி, நகராட்சிகளில் 90 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நகராட்சி பகுதியில் 65 அடி என மாற்றி அமைக்கப்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் நகராட்சி பகுதியில் மட்டும் ஏன் குறைவான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டை போலவே கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 850 அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள வறட்சி மற்றும் சாகுபடிக்கான கூடுதல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் வாய்க்கால்களில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். முன்னதாக விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

மஞ்சளை தரம் பிரித்தல்

 கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது- ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி, டிராக்டர்களில் விற்பனை செய்வதாக புகார் வந்து உள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. எனவே வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.

மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல் குறித்து தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான மென்பொருள் உருவாக்கவும், மஞ்சள் மட்டுமின்றி கொப்பரை தேங்காய், சோளம் போன்ற அனைத்து விளைபொருட்களையும் தரம் பிரித்து ஆய்வுக்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஞ்சளை தரம் பிரித்து பார்க்க ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்து கேட்பு கூட்டம்

 விவசாயிகளுக்கு தேவைப்படும் எந்திரங்கள் குறித்து மனுவாக எழுதி கொடுத்தால் பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான எந்திரங்கள் குறித்து தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சித்தோடு-சத்தியமங்கலம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிக அளவிலான மரங்கள் இடையூறாக உள்ளன. இதில் உயிரோட்டம் உள்ள மரங்களை இடமாற்றி வைக்கவும், மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பவானி ஆறு, காவிரி ஆறு இணைக்கும் திட்டம் தொடர்பான கடிதம் தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago