முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழா

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

 தேனி - தேனியில் 28வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் கலந்து கொண்ட வாகன அணி வகுப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் பேசும்போது தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிடும் வகையில் ஆண்டுந்தோறும் ஜனவரி மாதத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 17.01.2017 முதல் 23.01.2017 வரை சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு இந்தாண்டு உங்கள் பாதுகாப்பு, உங்கள் குடும்பத்தைக் காக்கும் - சாலையில் விழிப்புடன் இருப்பீர் என்ற கருத்தினை மையமாக கொண்டுள்ளது. பிற நிகழ்வுகளினால் ஏற்படும் உயிர் பாதிப்புக்களைவிட சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தினால் அதிக அளவில் உயிர் பாதிப்புகள் ஏற்படுகிறது.

வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் விருப்பு வெறுப்பிற்கு இடமளிக்காமல் முழு கவனத்துடன் வாகனத்தை இயக்குவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் வாகனத்தை இயக்க வேண்டும். வாகனம் இயக்கும்போது மது அருந்துவது, கைபேசியை உபயோகிக்க கூடாது. எதிரில் வாகனம் எதுவும் வரவில்லை என உறுதி செய்த பின்னரே, பிற வாகனத்தினை கடந்து செல்ல முயற்;சிக்க வேண்டும். களைப்பு, உறக்கம், சோர்வு ஏற்படும் நேரங்களில் வாகனத்தை இயக்கக் கூடாது. நமக்கு முன்பாக செல்லும் வாகனத்திற்கும், நமது வாகனத்திற்கும் தேவையான அளவு இடைவெளி விட்டு பயணத்தை தொடர வேண்டும்.

இளைஞர்கள் ஒரே சீரான வேகத்தில் வாகனம் இயக்குவதை தங்களுடைய இயல்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசமும், வாகன ஓட்டுநர்கள் இருக்கை பெல்ட் அணிந்து வாகனத்தினை இயக்கிட வேண்டும். வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து விபத்தில்லா தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்;கவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தியாகராஜன், ராஜ்குமார்;, இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்