முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி மகா கும்பாபிஷேகம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      நீலகிரி

ஊட்டி மாரியம்மன் திருக்கோவிலில் வரும் 9_ந் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொள்கிறார்.

                                  வர்ணம் பூசும் பணி

ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனதையொட்டி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் கடந்த 04.09.2016 அன்று பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அன்று முதல் கோபுரம் மற்றும் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வர்ணம் பூசும் பணி நிறைவு பெற உள்ளநிலையில் இக்கோயியிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 9_ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

                              கும்பாபிஷேகம்

அதனையொட்டி கடந்த 29_ந் தேதி முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன. கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் 7_ந் தேதி காலை 8.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜைகளும், மாலை 4.35 மணி முதல் முதல் காலயாக வேள்வியும் ஆரம்பமாகிறது. 8_ந் தேதி காலை 9.15 மணி முதல் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை 5 மணி முதல் மூன்றாம் கால வேள்வி பூஜையும், விழாவின் முக்கிய நாளான 9_ந் தேதி காலை 5.55 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.35 மணிக்கு விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், குடமுழுக்கு தீபாராதனை நடக்கிறது.

                                 அமைச்சர் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி சி.கோபாலகிருஷ்ணன் எம்.பி சட்டமன்ற உறுப்பினர்கள் கணேஷ், சாந்திராமு, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

                                அன்னதானம்

தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் அன்னதானமும், மாலை 5.30 மணிக்கு அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இக்கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச்செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதன், தக்கார் கே.ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்