குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அகிலேஷ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      அரசியல்
Modi 2016 11 20

காசியாபாத்  - உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.  முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள காசியாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

மாநிலத்தையும் சீரழித்து விட்டார்
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மீது அதிக நம்பிக்கை வைத்து பொதுமக்கள் வாக்களித்தனர். மேலும் படித்த இளைஞரான அகிலேஷ் முதல்வராக பொறுப்பேற்றதால் மக்களுக்கு நல்லது செய்வார் என்று மக்கள் நம்பினர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அவர் மக்களின் நம்பிக்கையை பெறத் தவறியதுடன் மாநிலத்தையும் சீரழித்து விட்டார்.

பின்தங்கிய பொருளாதாரம்
குறிப்பாக குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு சமாஜ்வாதி தலைமையிலான அரசு அடைக்கலம் வழங்கியதுடன் அவர்களை ஊக்குவித்தார். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதுடன் பொருளாதார வளர்ச்சியிலும் பின்தங்கி உள்ளது. பெண்கள் இரவில் வீட்டை விட்டு வெளியில் வரத் தயங்குகின்றனர். நடுத்தர மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என என் மீது அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், எனது பதவிக்காலம் முடியும்போது இதற்கு பதில் கூறுவேன். அதேநேரம், 5 ஆண்டு பதவியில் இருந்த அகிலேஷ் மக்களின் கேள்விக்கு இப்போது பதில் கூற வேண்டும்.

அபகரிக்கப்பட்ட நிலங்கள்
உ.பி.யில் பாஜக ஆட்சியிலிருந்து இறங்கிய பிறகு கடந்த 14 ஆண்டுகளாக வளர்ச்சி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலைக்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்டிவிட்டு வளர்ச்சி மற்றும் வளத்தை உருவாக்க பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் நடுத்தர மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: