தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறை பசுமை அங்காடிகள் மூலம் 20 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15க்கு விற்பனை செய்ய நடவடிக்கை கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் 20 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களைப் பெற்ற  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இது முற்றிலும் தவறான தகவல். சென்னையில் நிகழ்ந்த கப்பல் விபத்து காரணமாக சமையல் எரிவாயு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 31 டீலர்கள் மூலம் சீரான முறையில் சமையல் எரிவாயு விநியோகம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் 4,54,493 ரேசன் கார்டுகள் உள்ளது. இதில் 4,10,296 கார்டுகள் ஆதார் மற்றும் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. 37,638 கார்டுதாரர்கள் செல்போன் எண்ணை இணைத்துள்ளனர். 39,836 ரேசன் கார்டுகள்  ஆதார் மற்றும் செலபோன் எண் இணைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அவை போலி கார்டுகள் எனத் தெரியவந்ததால் அவை ரத்து செய்யப்டபட்டுள்ளது. 2,100 பேருக்கு இம்மாதம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. ஓட்டப்பிாரம் தாலுகாவில் உள்ள ரேசன் கார்டுகள் ஆதார் மற்றும் செல்போன் எண்கள்  முழுமையாக இணைக்கப்பட்டு வட்டல் வழங்கல் அலுவலர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளனர். மினரல் வாட்டர் விற்பனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 20 லிட்டர் தண்ணீரை ரூ.20க்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.20க்கு 20லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யாவிட்டால், கூட்டுறவு துறை மூலம் அம்மா மருந்தகம், பசுமை அங்காடிகள் மூலம் ரூ.15க்கு 20லிட்டர் மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படும். மினரல் வாட்டர் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புதுறை, நிலத்தடி நீர் பரிசோதனை கூடம் ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டும். 9 நிறுவனங்கள் மட்டுமே முறையாக அனுமதி பெற்றுள்ளனர் . தூத்துக்குடி மாவட்டத்தில், 15 நிறுவனங்கள் 2 துறைகளில் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன. சில நிறுவனங்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.  மீது நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்த 78 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெய்வச்செயல்புரம் அருகே சீல் வைக்கப்பட்ட நிறுவனம் விதிகளை மீறி மீண்டும் தண்ணீர் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் சார் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தியதின் பேரில், அந்நிறுவனத்திற்கு முழுமையாக சீல்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: