பா.ஜனதா தலையீட்டால் இரட்டை இலை முடக்கம்: திருநாவுக்கரசர்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      அரசியல்
Tirunavukkarasar 2017 01 09

சென்னை, இரட்டை இலையை முடக்கம் செய்ததில் பா.ஜனதா தலையீடு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், வார்தா, புயல் காரணமாக தமிழகம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்தது.இதனால் வறட்சி நிவாரண தொகையாக ரூ.39,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. ஆனால் வெறும் ரூ.2,000 கோடி மட்டும் ஒதுக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது. மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜனதாவின் வறட்சி நிவாரண நிதி குறைவை சுட்டிக்காட்டாமல் தமிழக மக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது வேதனை அளிக்கிறது. இந்த மனோ பாவத்தை கண்டிக்கிறோம். இதனால் தான் தமிழகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடையாமல் உள்ளது.ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இரட்டை இலை யாருக்கு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நாங்கள் இரட்டை இலையை எதிர்த்துதான் போட்டியிடுகிறோம்.இரட்டை இலையை முடக்கம் செய்ததில் பா.ஜனதா தலையீடு உள்ளது. நான் ஏற்கனவே மோடியின் கையில்தான் இரட்டை இலை உள்ளது என்றேன். இரட்டை இலையை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வக்கீல் வாதாடியது கட்சி கொள்கை முடிவல்ல. அது தொழில் ரீதியான முடிவு. இதனால் தேர்தல் பிரசாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதை ஷேர் செய்திடுங்கள்: