அ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      அரசியல்
panneerselvam 2017 1 15

பெரியகுளம்,  - சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது., சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை. சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியமில்லை. கட்சி எந்த குடும்பத்தின் பிடியில் செல்லக்கூடாது என்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நிலைப்பாடாக இருந்தது.

அரசியலில் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டுதான் சசிகலா கட்சியில் இணைந்தார். சசிகலா பொதுச்செயலாளர் ஆனது சட்டவிதிகள் படி செல்லாது. கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திடம் சென்று விடக்கூடாது. ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இரு அணிகளும் இணைந்தாலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் குறித்து விசாரிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்வரை ஓயமாட்டோம். சசிகலா குடும்பத்தை ஏற்பதில்லை என்ற எங்கள் அடிப்படை கொள்கையை மாற்றிக் கொண்டால் அது தமிழக மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் செய்யும் துரோகமாக அமைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: