முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம், கோவை மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பவியல் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சேலம், கோவை மாவட்டங்களில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்ததுடன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2 தமிழ் மென்பொருட்களையும், தொடங்கிவைத்தார். மேலும், மாவட்ட வேளாண் இணை இயக்குநர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 17 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 வாகன ஓட்டுநர்களுக்கு சாவிகளை வழங்கினார்.

சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 19 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகமற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இக்கட்டடம் முழுமையாக செயல்படும்போது சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், சுமார் 2 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 3 ஆயிரத்து 524 சதுரடி பரப்பளவில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின்கீழ், 15 தமிழ் மென்பொருட்களை உருவாக்க திட்டமிடப்பட்டு, அவற்றுள்"தமிழிணையம் ஒருங்குறி மாற்றி" மற்றும் "தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள்" ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மென்பொருட்களை இனணையதளம் வாயிலாக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி தொடங்கிவைத்தார். இவற்றை தமிழிணைய www.tamilvu.org/tkbd/index.html என்ற தமிழிணைய கல்விக் கழக இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர், அரசு தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர்,தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர், மின்னாளுமை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து