முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்தாண்டு டிசம்பரில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, 19,692 கோடி ரூபாயும், டிசம்பரில் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, 18,214 கோடி ரூபாயும் நிவாரண நிதி வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.

மத்திய அரசின் பல்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்த பிறகும், பலமுறை நினைவூட்டல் அனுப்பியும், இந்த நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை. அதனால், உடனடியாக இந்தத் தொகையை விடுவிக்க மத்திய அரசுக்குஉத்தரவிட வேண்டும். மேலும் உடனடியாக, 2,000 கோடி ரூபாயை தரும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இதை நேற்று முன்தினம் குறிப்பிட்டார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி வலியுறுத்தினார். விசாரணை பட்டியலில் அதை விரைவில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, அமர்வு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து