பிச்சாவரம் வனப்பகுதியினை ஆழப்படுத்திட நடவடிக்கை சட்டபேரவையில் பாண்டியன் கேள்விக்கு வனத்துறை அமைச்சர் பதில்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      கடலூர்

பிச்சாவரம் வனப்பகுதியினை சுற்றியுள்ள முகத்துவாரங்களை ஆழபடுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் சிதம்பரம் எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன் கேள்விக்கு வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டபேரவை 16.06.2017 அன்று கூடியதும் கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசியதாவது

எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் பதில்

தம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிச்சாவரம் வனப்பகுதியானது சதுப்புநிலக் காடுகள் அமைந்த அடர்ந்த வனப்பகுதி. உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்ட சதுப்பு நில காடுகளில் முதன்மையானது இந்த பிச்சாவரம் சதுப்புநில காடுகளாகும். கடந்த 2004 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஆழிப் பேரலையால் உலகின் பல பகுதிகளில் மிகப்பெரிய உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் உண்டானது. ஆனால் இந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள பகுதிகளில் சுனாமியின் பேரலையின் தாக்கம் குறைந்து கானப்பட்டது. அழிந்து வரும் இந்த அரிய வகை சதுப்பு நில காடுகளை காத்திடவும் மிகப்பெரிய அளவில் அபிவிருத்தி செய்திடவும் தேசிய காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிச்சாவரம் வனப்பகுதியினை படகில் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதி அமைந்துள்ள பகுதிகளை முழுமையாக சுற்றி பார்க்க ஏதுவாக இப்பகுதியில் உள்ள முகத்துவாரங்களை ஆழப்படுத்திட வேண்டும் என்று  கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் ,

பிச்சாவரம் சதுப்பு நில காடுகள் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.161.47 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு, அதற்கான ஆணை எதிர்பார்க்கபடுகிறது. மத்திய அரசின் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் நிதி ஒப்புதல் பெறப்பட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாரவரம் வனப்பகுதியினை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனப்பகுதி முழுவதும் சுற்றி பார்த்திட ஏதுவாக முகத்துவாரத்தினை ஆழபடுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவரது இந்த கருத்து நல்ல கருத்து வரவேற்க தக்கது. அவரது கோரிக்கையினை பரிசீலித்து முகத்துவாரம் ஆழபடுத்துதல் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து