முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை பண்பை உருவாக்கி கொள்ள சில பயிற்சிகள்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

ஒருவன் தலைவனாக உருவாக வேண்டுமென்றால், அவன் தன்னை முழுவதுமாகப் புரிந்தவனாக, தன்னை, தன் மனதை அடக்கத் தெரிந்தவனாக, தன் மீது முழுக் கட்டுப்பாட்டுள்ளவனாக ஆக வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அவன் அப்படி மாற வேண்டும். அதுதான் அவன் நல்ல தலைவனாக உருவாக ஆரம்ப நிலை.

நல்ல தலைவனாக சரியான புரிதலும், தீவிரமான பற்றுதலும், கொள்கைப் பிடிப்பும், ஆற்றலும் தேவை. இவையெல்லாம் ஒன்று சேரும் பொழுது, உண்மையில் நீங்கள் யார், எதற்காக நீங்கள் உருகுகிறீர்கள், என்பது தெரிந்துவிடும்.   ஒரு நல்ல தலைவனாக ஆவதும் சாதாரணமான விஷயமில்லை. அதை சாதாரணமாகச் செய்துவிட முடியாது.

குடும்பங்கள், நிறுவனங்கள், சமுதாயம் மற்றும் அரசியல் என்று எல்லா இடங்களிலுமே இதுதான் நிலைமை. தலைவர், லீடர். பாஸ் என்றெல்லாம் பிறரால் அழைக்கப்படுகிறார்களோ இல்லையோ, ஏதாவதொரு வகையில் தலைமை தாங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் ‘இவர்கள்’ சொல்வதைக் கேட்கிறார்கள். நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, பெரிய விஷயங்களிலோ, சிறிய விஷயங்களிலோ, அடிக்கடியோ, எப்பொழுதோ… நாம் அங்கங்கே சில தலைவர்களைச் சந்திக்கிறோம். நாமும் சில இடங்களில், சிறிது நேரத்திற்கு, சில சமயங்களில் தலைவர்களாக செயல்படுகிறோம்.
தொழிற்சங்கத்தில் தலைவருக்கும் சாதாரண உறுப்பினர்களுக்கும் இடையே, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியருக்கும் இடையே என்று எல்லா இடங்களிலும் வித்தியாசங்கள் உண்டு.  பார்வை, பொறுப்பு, செயல்பாடு எனப் பலவற்றிலும் வித்தியாசங்கள் உண்டு. அப்படி உண்டாக்கிக் கொள்வதும் செயல்படுத்துவதும் தலைவனாவதற்கான வழி.

ஆசைப்படுங்கள், கனவுகாணுங்கள்

தலைவன் ஆக நினைப்பவர்கள், கனவு காண வேண்டும். அப்துல்கலாம் அவர்கள் சொல்லுவதுபோல, தூக்கத்தில் வரும் கனவல்ல, தூங்கவிடாமல் செய்யும் கனவு. எதிர்காலம் பற்றிய கனவு. இன்றைய பிரச்னைகளில் இருந்து வெளிவந்துவிட்டது போல, அல்லது இன்றைய நிலையில் இருந்து மேம்பட்டுவிட்டது போலக் கனவு. தன்னுடைய மேம்பாடு குறித்து அல்லாமல் தன்னைச் சார்ந்த கூட்டத்திற்கான மேம்பாட்டுக்காகவும், அவர்களின் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பதைபற்றியும் கனவு காணவேண்டும்.

உங்களுடைய மனதிலுள்ள ஆழமான ஆசைகள் எதுவோ, அதுதான் நீங்கள்  உங்கள் ஆசைகளின்படி இருப்பதே, உங்கள் செயல்பாடுகள்; அதுவே தான் உங்களின் மாற்ற முடியாத முடிவும் கூட என்கிறது உபநிடதம். பெரியதோ, சிறியதோ, எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதுதான் நம்முடைய ஆசை.

 உங்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்க வேண்டும். பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ… அப்படி ஒரு கடிதத்தை நீங்களே உங்களுக்கு எழுதுங்கள். மேலும் அதில் உங்களை மற்றவர்கள் எப்படி அறிய வேண்டும், நினைக்க வேண்டும் என்பதையும் எழுதுங்கள். அப்படி எழுதிப் பார்க்க நாம் எப்படிப்பட்ட தலைவராக வர வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும்.


சரித்திரத்தில் உங்களைக் கவர்ந்த தலைவர்கள் யார் யார்? உங்களைக் கவர்ந்த மற்ற நபர்கள் யார், யார், என்று ஒரு பட்டியல் தயாரிக்கலாம். அவர்கள் என்ன என்ன செய்தார்கள்? எதனால் உங்களுக்கு அவர்களைப் பிடித்தது, பிடிக்கிறது? என்று சிந்திக்கலாம். அவரைப் போன்ற தலைவராக முயற்சிக்கலாம்.

1.தன்னைத்தாண்டிச் சிந்திப்பது

தலைவர்களும் மனிதர்கள் தான். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போல, தங்களைப் பற்றி மட்டுமே நினைப்பதில்லை. இது தான் தலைவனின் அடிப்படைக் குணம். தலைவர்கள் தலைவர் ஆவதற்கு முன்பிருந்தே அப்படித்தான் இருப்பார்கள். சிந்திப்பார்கள். தான் உண்டு. தன் வேலையுண்டு என்று செல்பவர்கள் தலைவர்களில்லை. தனக்குக் கிடைப்பதை மட்டும் பார்க்காமல், மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தலைமையை நோக்கிச் செல்வதில் மற்றவர்களைவிட இவர்கள் ஒரு படி மேல் தான்.

2.மற்றவர்களுக்கு வழி காட்டுவது

தங்களின் வாழ்க்கைப் பிரச்னையில் சிக்கித் தவித்து, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது, இதோ இப்படிச் செய் என்று வழி காட்டுபவர்கள் தலைவர்கள். பிரச்னையை அடையாளம் காட்டுவது, எதிர்ப்பது ஒரு செயல். அடுத்து அதை முடிக்க, வெல்ல வழி வேண்டும். அதைச் செய்வதும், தலைவனின் குணம்.

3.மற்றவர்களைக் கவர்வது

தலைவர்கள் அழகாக இருப்பது ஆரம்ப ஈர்ப்புக்கு உதவும். உருவமோ, பேச்சோ, பாணியோ, செயல்பாடோ ஏதோ ஒன்று வித்தியாசமாக, பிறரைக் கவர்வதாக இருக்க வேண்டும். மற்றவர்களைக் கவரத் தவறியவர்கள் தலைவர்களாகியதாகச் சரித்திரம் இல்லை. தலைவன் கவனிக்க வைக்க வேண்டும். தன்பால், திரும்ப வைக்க வேண்டும்.

4.மற்றவர்களைப் பங்கு பெறச் செய்வது

சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள், இவர்கள் மற்றவர்களைவிடக் கூடுதல் திறமை படைத்தவர்கள். அதில் சந்தேகம் இல்லை. அவர்கள் தலைவர்களாகி விட முடியாதா? முடியாது. வேலை செய்வதற்கும் வேலை செய்து வாங்குவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஒன்றில் பரிமளிப்பவர் அடுத்ததிலும் பரிமளிப்பார் என்று சொல்ல முடியாது. இரண்டுக்கும் தேவைப்படும் திறமைகள் மனோபாவங்கள் வேறு வேறு. தலைமையும் அப்படித்தான். அதற்கான திறன்களில் முக்கியமானது, மற்றவர்களிடம் அவரால் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது.  தானே செய்பவன் தலைவனல்ல. தானும் செய்யத்தான் வேண்டும். அதைவிட முக்கியம் மற்றவர்களையும் பங்கு பெற, ஈடுபடச் செய்ய வேண்டும். அதற்குத்தான் தலைமை, தலைவர்கள் தேவை.

5.தொலைநோக்கு

சில தலைவர்கள் நடைமுறையில் வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்கள். இதையெல்லாம் தாண்டித் தொலைநோக்குப் பார்வை இருப்பவர்களும் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். ‘இப்பொழுது இது சரி. ஆனால் பின்பு…!, இன்னும் சில ஆண்டுகள் கழித்து…”என்கிற கோணங்களில் சிலர் சிந்திப்பார்கள்.

6.மற்றவர் தேவைகளைப் புரிந்து கொள்வது

தன்னைச் சுற்றியுள்ள உலகம் எது? அது எப்படிப்பட்டது, அங்குள்ளவர்கள் யார்? அவர்களது பிரச்னை என்ன? அவர்களுக்கு என்ன தேவை? ஏன அவற்றைச் சரியாகச் புரிந்துகொள்பவர்கள் தலைவர்கள்.

7.சொல்வதைச் செய்யுங்கள்

நீங்கள் உங்களின் முக்கிய கொள்கைகளாக, நம்பிக்கைகளாக எதைச் சொல்லுகிறீர்களோ அதை உங்களின் அன்றாட வாழ்க்கையிலும் செய்துகாட்டுங்கள். வெறுமனே மற்றவர்களுக்காக மட்டும் அப்படிச் சொல்பவரில்லை. அவர், அதற்காகவே வாழ்பவர். அவருடைய அத்தனை செயல்பாடுகளும் அதற்காகவே என்று மக்கள் நினைக்க வேண்டும்.

8.பொது விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வது

‘எனக்காக இல்லை, மற்றவர்களுக்காகக் கேட்கிறேன்’ என்பது தான் தன்னைத் தாண்டிச் சிந்திப்பது. இப்படிச் சிந்திப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள். அதனால் தலைவனாகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் எடுக்கத் தயங்குகிற விஷயங்களைக் கையில் எடுத்துக் கொள்பவர்கள் தலைவர்கள். யாரோ ஒருவர் முயற்சி எடுப்பார். எடுத்துச் சொல்வார். எதிர்ப்புகளைச் சமாளிப்பார். மக்களைத் திரட்டி, கேட்கவைத்து, வாங்கிக் கொடுப்பார்.

9.சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெருமை செய்யுங்கள்

மற்றவர்கள் புகழை, உழைப்பைத் திருடுபவர்களாக தலைவர்கள் இருக்கக் கூடாது. அப்படிச் செய்பவர்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வராது. யார் செய்தாரோ அவருக்கே புகழையும், பெயரையும் கொடுக்க வேண்டும். சிறிதளவே அதில் அவரது பங்களிப்பு இருந்தாலும், கிடைத்த வெற்றியில் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்ப்பார்கள்.  தொடர்பிருப்பவர்கள் கேட்காமலேயே தலைவர்கள் அவர்களுக்குப் பெருமை செய்ய வேண்டும்.  தொண்டர்கள் தான் என்றில்லை. உடன் பணியாற்றுபவர்கள், குழு உறுப்பினர்கள் என்று அவர்கள் யாராக இருந்தாலும், வேலையில் பங்களிப்பை செய்தவரைத் கௌரவிக்கும் வகையில் ‘அவர்தான் அந்தப் பணியைச் செய்தார்’ என்று பிறரிடம் அறிமுகம் செய்வது ஓர் பண்பாடு. எதிரிகளாலும் மதிக்கப்படும். தலைவனுக்குத் தேவையான குணம் அது. அப்படி செய்ய தலைவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்பவர்களால் தான் மற்றவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, பாராட்டு செய்யும் விதமாக நடந்து கொள்ள முடியும்.

10.கவனம் பிசகக் கூடாது

ஏதோ ஒரு தொலைநோக்கைச் சொல்லி, எங்கேயோ தொடங்கி, எப்படியோ போய்த் திசை தடுமாறி பறவைகளாக தலைவர்கள் ஆகி விடக்கூடாது. மொழியா, இனமா, தேசமா, பொருளாதார உயர்வா, விரிவாக்கமா, சமுதாய முன்னேற்றமா அது ஏதுவாகவும் இருக்கலாம். எடுத்த செயலில் முழுக்கவனம் கொள்பவர்கள் தலைவர்கள். தலைவர்களுக்கு வேண்டிய குணம் இது.

11.மற்றவர்களையும் கலந்து கொள்ளுங்கள்

தலைவனாகப் போகிறவர் சிந்திக்கிறார். அவருக்குப் பிரச்சனைகள் புரிகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளும் தெரிகின்றன. அவர் செயல்பட ஆரம்பித்து விடலாமா? கூடாது.  அவர் அளவுக்கு தகுதி இல்லாவிட்டாலும், அவருக்கு உதவி செய்யும் குழு ஒன்று இருக்கும். அது முறையாக அமைக்கப்பட்டதாகவோ அல்லது தானாகவே அமைந்து விட்டதாகவோ  இருக்கலாம். தன் திட்டங்களைப் பற்றி அவர்களுடன் விவாதித்து, அவர்களையும் கலந்தாலோசித்து தலைவன் செய்ய வேண்டும். ஏனெனில்,

அ. தலைவனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை.

ஆ. தலைவனுடைய கண்ணுக்குத் தெரியாத பிரச்னைகள் இருக்கலாம்.

இ. ஏன்? எதற்கு? எப்படி? என்பவை தெரிந்திருந்தால் தலைவனுடன் இருக்கும் குழுவுக்கு செயல் முடித்தல் சுலபமாகும்.

ஈ. கூட இருப்பவர்களுக்கு விபரம் தெரியாவிட்டால், அவர்களால் முழு மனத்துடன் ஈடுபட முடியாது.

12.அவசர முடிவுகள் கூடாது

எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பெரிய முடிவுகளை தலைவன் நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. முதலில் தன் திட்டங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.

13.கொள்கைகளால் கவருங்கள்

உருவம் இருக்கட்டும். அவை ஆரம்ப ஈர்ப்புக்கு உதவலாம். ஆனால் கொள்கைகளால் தான் ஒரு தலைவன் நிலைத்து நிற்க முடியும். எவ்வளவோ நபர்கள் அழகாக, கவர்ச்சியாக இருந்தும் கூட, பெரிய கூட்டத்தை தன் வசப்படுத்த முடியாமல் தவற விடுகிறார்கள். காரணம் அவர்களுடைய கொள்கைகள், அணுகுமுறைகள் தான். அதேசமயம் வெளித்தோற்றம் சிறப்பாக இல்லாதவர்கள் கூட தாக்கம் ஏற்படுத்துகிற தலைவர்களாக பரிமளிப்பதைப் பார்க்கிறோம்.

14.பிரச்னைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

தலைவன் என்பவன், தலைவனாக விரும்புகிறவன் தன் கூட்டத்தின் தேவைகளை, பிரச்னைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். தன் மக்கள் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்களின் இந்த நிலைக்கு யார் அல்லது எது காரணம்? அவர்களுக்கு எந்த நிலை நல்லது. அந்த நிலை எப்படியிருக்கும்? என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி செயல்படுபவன்தான் தலைவன். அதற்கு அவனுக்குத் தொலைநோக்கு இருக்க வேண்டும்.  மக்கள் தரையில் இருப்பதால், கூட்டத்தோடு கூட்டமாக இருப்பதால், அவர்களால் தங்களைச் சுற்றியுள்ள சிலவற்றைத்தான் பார்க்க முடியும். ஆனால் தலைவன் என்பவன் உள்ள நிலை அப்படிப்பட்டதல்ல. உயரத்தில் ஏறி தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதுபோலத் தலைவன் தூரத்தில் இருக்கும் நல்லவற்றைப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவை தொலைநோக்கு.

15.நம்பிக்கை கொள்ள வையுங்கள்

யானையைத் தருகிறேன்… பூனையைத் தருகிறேன்… என்று யார் வேண்டுமானாலும், சொல்லலாம். கேட்பவர்கள் நம்ப வேண்டுமே. நம்ப வைப்பவன்தான் தலைவன். பலரும் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தொலைநோக்கு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அப்படி இருப்பவர்கள் அனைவருமே தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.  எல்லா வெற்றிகரமான தலைவர்களிடமும் ஏதோ ஒரு வழிமுறை, சக்தி, திறன் இருக்கிறது. அவர்கள் சொல்வதை நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி மக்களை நம்பிக்கை கொள்ள வைப்பது தலைமையின் குணம்.

16.நிதானம் தவறக்கூடாது.

நல்ல தலைவர்கள் என்பவர்கள் வெற்றி கண்டு குதிக்க மாட்டார்கள். நிதானத்தை கடைப்பிடிப்பார்கள்.

17.விட்டுக் கொடுக்காதிருங்கள்

தலைவன் தனித்திறமையாளன் அல்ல. அப்படியே இருந்தாலும் தன் அணியை அரவணைத்துச் செல்ல வேண்டும். ‘வெற்றிக்கு நானே காரணம். தோல்விக்கு என் குழு தான் காரணம்’ என்று சொல்பவர் தலைவர் இல்லை. குறிப்பிட்ட சம்பவங்கள், நிகழ்ச்சிகளில், நேரங்களில் ஏதோ காரணங்களால் வெற்றி நழுவி விட்டது. தலைவனாக இருப்பவன் என்ன செய்வான்? எந்தக் காரணம் கொண்டும் தன் குழுவை விட்டுக் கொடுக்க மாட்டான். அவர்களுக்காக வாதாடுவான். இந்த அணுகுமுறை உள்ள தலைவர்கள் நிறையப் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!