மடிநோய்களுக்கான மரபுவழி மூலிகை மருத்துவ முறைகள்

புதன்கிழமை, 12 ஜூலை 2017      வேளாண் பூமி
mastitis

Source: provided

கறவை மாடுகளில் பால் உற்பத்தியைப் பெருக்க நல்ல தீவனம், காற்று வசதி, நோய் தடுப்பு  முறைகள், இயற்கை சார்ந்த சூழல் ஆகியவை முக்கியமாகும். கறவை மாடு வளர்ப்பு பல சோதனைகளையும் கடந்து பண்ணையாளர்களுக்கு தினசரி தொடர் வருமானத்திற்கு இன்றளவும் உதவியாய் இருக்கிறது. பண்ணையளவில் பொருளாதாரம் சார்ந்த இடர்கள் பலவும் இருந்தாலும், நோய்கள் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் நோய் வராது தடுக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.

கறவை மாடுகளை வாங்கும்போது மடி மற்றும் காம்புகளின் தன்மையை அறிந்து வாங்க வேண்டும். மாடுகளை கழுவி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் கறவை முறையின் காரணமாகவும், காய்ந்த நிலையில் பால் கறப்பதினாலும் மடிக்காம்புகளில் வெடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படும்.

கறவை மாடுகளில் மடிசார்ந்த நோய்கள் :  நோய்கள் பல இருந்தாலும் ஒரு சில நோய்கள் பொருளாதார இழப்பு அதிக அளவில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதில் மிகவும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டது கறவை மாடுகளின் மடி சார்ந்த நோய்களாகும். இதுபற்றிய விழிப்புணர்வு பண்ணையாளருக்கு அவசியம் பல ஆராய்ச்சி முடிவுகளின் படி கறவை மாடுகளில் 50 விழுக்காடு நோய்கள் மடி சார்ந்தவையாக இருப்பது அறியப்படுகிறது.

மடிசார்ந்த நோய்கள் :  மடிநோய் என்பது பெரும்பாலும் தொற்றுநோயாக இருக்கும்.
சில நேரங்களில் மடிக்கட்டும் ஏற்படும். மடியின் முன்புறம் முன்கால்கள் வரை நீர் கோர்த்துக் காணப்படும்.  கோடை மற்றும் மழைப் பருவம் மாறும் சூழலிலும், கோமாரி (கசப்பு) நோய் கண்ட மாடுகளிலும் சுகாதாரக் குறைவான கறவை முறைகளிலும் மடியில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். தலை ஈத்து மாடுகளிலும், முறையற்ற முரட்டுத்தனமான கறவைப் பழக்கம் உள்ள பண்ணைகளிலும் மடிக்காம்பில் வெடிப்பு மற்றும் காயங்கள் காணப்படும்.

மடிநோயின் அறிகுறிகள் : மடிநோய் உள்ள மாடு, மடி வீங்கி அல்லது கல்போல இருக்கும். கை வைத்தால் காலைத் தூக்கும். உதைக்கும். பாலில், வெள்ளை நிறம் தவிர வேறு எந்த நிறம் (மஞ்சள், இளஞ்சிவப்பு) கண்டாலும் அது மடிநோய் எனலாம். அது போலவே பாலில் ஏதேனும் திரி அல்லது நூல் போல பொருள் தென்பட்டாலும் மடிநோய் தான்.  பாலை, நாவின் நுனியில் ஒரு சொட்டு வைத்துச் சுவைத்தால் அதில் சிறிது உப்புச்சுவை இருந்தால் மடிநோய் இருக்கலாம்.  இரண்டு ஈற்றுக்கு மேலே உள்ள மாடுகளில் கன்று ஈன்றவுடன் மடிநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

கறவை மாடுகளில் மேற்கண்ட எந்த அறிகுறிகள் தனித்தோ அல்லது கலந்தோ காணப்படும் சூழலில் அதை மடிநோய் என்று மனதில் கொண்டு உடன் முதலுதவி செய்வது நலம். பெரும்பாலான நேரங்களில், உடன் மருத்துவ உதவி கிடைக்காத போது நோயின் தன்மை தீவிரமடைந்து பாதிப்பு அதிகமாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மடிநோய்க்கான மரபு சார்ந்த மூலிகை முதலுதவி குறிப்புகள்  :  முதலில்,மடிநோய் கண்ட மாடுகளின் மடியினை நீர்விட்டு தேங்காய் நார் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும்.  பிறகு அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து விடவும். மடியில் நீர் ஈரம் காயும் முன்பு கீழ்க்கண்ட முறையில் விளக்கப்படும் மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும். சோற்றுக்கற்றாலை மடல் - எடை 250 கிராம்(ஒன்று அல்லது இரண்டு) (முழு மடல்)  மஞ்சள் தூள் - எடை 50 கிராம் (சமையலுக்கு பயன்படுவது) (ஒரு சாம்பார் கரண்டி அளவு)

சுண்ணாம்பு - எடை 20 கிராம்(வெற்றிலைக்கு போடுவது) (ஒரு கொட்டைப்பாக்கு அளவு)

சோற்றுக்கற்றாழை ஒன்று அல்லது இரண்டு மடல் (250 கிராம்) எடுத்து, தோலுடன் முழுதாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மஞ்சள் தூள் (50 கிராம்) எடுத்து அந்த பாத்திரத்தில் போடவும். பிறகு சுண்ணாம்பு (20 கிராம்) சேர்த்து இந்த மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து மின்அரவை இயந்திரம் அல்லது ஆட்டு கல்லில் மை போல அரைத்துக் கொள்ளவும். இந்த மூலிகை மருந்துக் கலவை ஒரு மாட்டிற்கு ஒரு நாள் முழுவதும் தடவ வேண்டிய அளவாகும்.

மடியில் மருந்து தடவும் முறை : முதலில், கூறியுள்ள படி நோய் கண்ட மாடுகளின் மடியினை தேய்த்துக் கழுவி அனைத்து காம்பு மற்றும் மடி பகுதியினையும் நன்றாக கைகளால் பிசைந்து பாலைக்கறந்து மடியின் நீர் ஈரம் காயும் முன்பு மேற்கண்ட மருந்தினை முறையாகப் பயன்படுத்தவும்.

ஒரு கை அளவு மேற்கண்ட மூலிகை மருந்துக் கலவையை ஒரு குவளையில் இட்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து நன்கு கைகளால் கரைத்து மடியின் அனைத்து பகுதியிலும் கைகளால் தேய்த்து விடவும். தேய்க்கும்பொழுது கீழே மருந்து சொட்ட வேண்டும். கெட்டியாக தடவக்கூடாது. இந்த மருந்துக் கலவையை ஒரு நாளைக்கு, எட்டிலிருந்து பத்து முறை தடவ வேண்டும். ஒவ்வொரு முறை மருந்து தடவும் முன்பும் மடியில் நீர் தெளித்து நன்கு மடியினைக் கழுவி பாலைக் கறந்து விடவும். ஒரு நாளைக்கு பத்து முறை தடவ மேற்குறிப்பிட்ட மூலிகை மருந்துக் கலவை போதுமானது. இந்த முதலுதவி மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.

2.2. மடிக்காம்பு வெடிப்பு  :  கறவை மாடுகளின்மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டால் மூலிகை முதலுதவி செய்வதன் மூலம் கறவை மாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். முதலில் மடியைக் கழுவி கீழ்க்கண்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கரண்டி (5 கிராம்) மஞ்சள்தூள் மற்றும் ஒரு கரண்டி (5கிராம்) கல்உப்பு கலந்து நீரை கொதிக்க வைத்து ஆறியவுடன் மடி மீது தெளித்து சுத்தமாகக் கழுவ வேண்டும். மேற்கூறிய நீரில் கழுவிய மடி மற்றும் காம்பு பகுதியை நன்கு உலர்ந்த சுத்தமான பஞ்சு துணியினால் ஈரம் உறிஞ்சும்படி ஒற்றித் துடைக்க வேண்டும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :  மஞ்சள் தூள் 10 கிராம், பூண்டு 4 பல், குப்பைமேனி 10இலை, வல்லாரை 10 இலை, வெண்ணெய் 50 கிராம்.

செய்முறை :  மேற்கண்டப் பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து, நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை  :  மடிக்காம்பில் காயம் மற்றும் வெடிப்பு ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்து வெண்ணெய்யை கையில் எடுத்து வெடிப்பு மற்றும் காயம் உள்ள பகுதிகளில் மென்மையாக தடவி விடவும்.

மாடுகள் கீழே படுத்து எழும்போது மடி மற்றும் காம்புப் பகுதிகள் அழுக்காகி விடும். எனவே இந்த மருந்தினை மடி மற்றும் காம்புப் பகுதியை சுத்தம் செய்து கறவை செய்யும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் மேற்கூறிய மருந்தை பலமுறை தடவி விட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் மடியில் உள்ள காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகள் காய்ந்த நிலையில் இருக்கக் கூடாது. மருந்து எந்த நேரமும் காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2.3. மடி அம்மை ; கறவை மாடுகளில் மடி அம்மைக் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன் பாதிப்பால் சரியாக பால் கறக்கப்படாமல் மடிநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

கோமாரி, வாய் சப்பை நோய் கண்ட மாடுகளில் பல கால் நடைகளில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். இந்த அம்மைக் கொப்புளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாகக் கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :  திருநீற்றுப் பச்சிலை 10 இலை, துளசி 10 இலை, வேப்பிலை கொழுந்து ,  10 இலை, பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை :  மேற்கண்ட பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை  : மடி காம்பில் அம்மை ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்த வெண்ணெய்யை கையில் எடுத்து அம்மை உள்ள பகுதிகளில் மென்மையாகத் தடவி விடவும்.

2.4. மடிநீர்க்கோர்வை :  மடிமுன்பகுதி நீர்க்கோர்வை :  அதிக பால் கறக்கும் இளம் கறவை மாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் ஈற்றுகளில் சில மாடுகளில் மடியின் முன் பகுதி முன்னங்கால் வரை நீர் கோர்த்து கொண்டு மாடுகளுக்கு அயர்ச்சியைக் கொடுக்கும். ஒரு சில நேரங்களில் கன்று ஈன்றுவதற்கு முன்பாகவும் மடிநீர்க் கோர்வைக் காணப்படும். இந்நிலை கண்ட கன்று ஈன்ற மாடுகளில் நாள் ஒன்றுக்கு சில முறை கூடுதலாக பால் கறப்பதன் மூலமும், கன்றுகளைக் கூடுதலாக ஊட்ட விடுவதன் மூலமாகவும் இந்நிலையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்  :  பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 50 கிராம், நல்லெண்ணெய் 300 மிலி.

செய்முறை  :  நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து இளம் சூட்டில் 10 பல் பூண்டினை அரைத்து மஞ்சள் தூளை சேர்த்து போடவும்.

பயன்படுத்தும் முறை  :  எண்ணெய் சூடு ஏறியவுடன் பாத்திரத்தை இறக்கி வைத்து நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் ஈரம் இல்லாமல் சுத்தமான பஞ்சு துணியினால் துடைத்து நன்கு உலர்ந்த நிலையில் 100 மிலி அளவு மருந்து கலந்து நல்லெண்ணெயை சிறிது சிறிதாக உள்ளங்கையில் ஊற்றி மடி நீர்க்கோர்வை உள்ள பகுதிகளில் நன்கு அழுத்தி வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும்.

பின் குறிப்பு  :  மடிக்காம்புப் பகுதியில் கொப்புளம் மற்றும் வெடிப்பு கண்ட சமயங்களில் பால் கறவை செய்பவர்கள் மிகவும் கவனமாக கட்டை விரலை நீக்கி காயம் பெரிதாக்காமல் பாலைக் கறக்க வேண்டும்.

தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம் - 636001.

தொகுப்பு : து.ஜெயந்தி, ப.ரவி,  மற்றும் நா.ஸ்ரீபாலாஜி

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து