முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கையின் அருமையான, அற்புதமான கொடை - தேன்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும்.  அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின.  காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன.  40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.

தேனீக்கள் பூவிலிருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.  தேன் என்பது குளுக்கோஸ், புரக்டோஸ், நீர் மற்றும் சில என்ஸைம்கள் மற்றும் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும்.  இவை மலரிலிருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும்.  தேனீக்கள்; உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும்.  இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும்.  பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும்.  வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும்.  ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாக கருதப்படுகின்றது.  குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும்.  ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.  நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது.

இயற்கையின் அருமையான, அற்புதமான கொடை - தேன்.  இதில் சிறந்த ஊட்டச்சத்துக்களும், தனித்துவமான மருத்துவப் பண்புகளும் அடங்கியுள்ளன.  தேனை நாம் அப்படியே குடிப்பதில்லை, தண்ணீரிலோ, வெந்நீரிலோ, எலுமிச்சம்பழச்சாறு போன்றவற்றோடு சேர்த்து குடிக்கலாம்.  தேனின் பயன் அறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ண மருத்துவர்கள் தருகிறார்கள்.  தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும்.  தேன் அதிக சத்து நிறைந்தது, எளிதில் செரிக்கக் கூடியது. 5 கிலோ பாலுக்கு 1 கிலோ சுத்தமான தேன் சமம்.  தேன் எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமானது.  தேன் உடலுக்கு ஊட்டந்தரும் உணவாகவும், உடல் நலம் காக்கும் ஒப்பற்ற காவலனாகவும் இருப்பதனால் இதனை உயிர்க்காக்கும் 'அமிழ்தம்" எனலாம்.

தேனில் வைட்டமின் பி2, பி6, ஹெச், கே மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது.  தேன் 79.5 சதவிகிதம் சர்க்கரை சத்துக்களால் ஆனது.  தேனில் குளுக்கோஸ் என்னும் பழச்சர்க்கரை, பிரக்டோஸ் என்னும் எளிதில் கரையக்கூடிய படிகச் சர்க்கரை, சுக்ரோஸ் என்னும் கரும்புச் சர்க்கரை அடங்கியுள்ளது.  ஆகையால் இது எளிதாகச் செரிக்கக் கூடியதும் இரத்தத்தில் உடனே சேரக் கூடிய உணவுப் பொருளாகும். எனவே உடலுக்கு அதிக சக்தியை தருவதோடு உடல் நிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.   

தேன் மற்றும் இஞ்சி சாற்றை சம அளவு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.  வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளி, இருமல் போன்றவை குணமாகும். 

உடல் நிலை ஒரே சீராக அமைய காரச்சத்து தேவை.  இந்தப் புளிப்பான அமிலத் தன்மையுடைய காரச்சத்து தேனில் இருக்கிறது.  இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிது உதவுகிறது.  மேலும் தேனிலிருக்கும் அமிலம், தீராத நோய்களை உண்டுபன்னும் நுண்ணுயிர்க் கிருமிகளையும் அழிக்கின்;றது.

ஓரு குவளை மிதமான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் தேனும், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் காலைக்கடன்களுக்கு முன் குடித்துவர இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொலுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும், உடலுக்கு அது கசப்புச்சுவையைத் தருகிறது.  கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம் பெறுகின்றன.    

அனைஸ் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இதயம் பலப்படும் இயங்குசக்தி அதிகரிக்கும்.

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

தேன் மூலம் கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், விக்கல், வாந்தி பேதி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு, வயிற்றுக்கடுப்பு, தாகம், தீப்புண் போன்றவை குணமாக்கும்.  குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். 

சிறிதளவு கருப்பு மிளகை பொடி செய்து அதே அளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்திவர ஆஸ்துமா குணமாகும்.

விளையாட்டு வீரர்கள் தேன் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலுக்குத் தேவையான சத்தான ஃபிரக்டோஸ் ஆக மாறி கிடைக்கிறது. 

மனித உடலில் உள்ள கல்லீரல் மூலம் குளுக்கோசினை உற்பத்தி செய்ய தேன் உதவி செய்கிறது.  இது மூளையில் சர்க்கரை அளவை அதிகரித்து வேகமாக கொழுப்பை கரைக்கும் ஹார்மோன்கள் விடுவிக்கிறது. 

குடலிலுள்ள புண்கள், மற்றும் அழுகலை அகற்றுவதில் பயன்படுகின்றது.  தேனை உண்டால் பசி உண்டாவதோடு,

குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு தேக்கரண்டி அளவு தேனைக் கொடுத்துவந்தால், அதுவே உறக்கத்தைத் தூண்டும் நல்ல மருந்தாகவும் செய்படும். 

உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது.  உடல் பருமனானவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்தி வர, உடலிலுள்ள கெட்ட கொலுப்புகளை குறைக்கும் பலம் அதிகரிக்கும்.  மேலும் எலுமிச்சம்பழச்சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தாலும் உடல் பருமன் குறையும்.  உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்தி வர, உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.  குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடை கூடும்.

தேனை புண்களுக்கு மருந்தாகவும் பூசலாம்.  தீப்பட்ட காயங்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். 

எலுமிச்சை பழத்தை வெந்நீரில் பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, பருகி வர குரல் வளம் பெரும், தொண்டைக் கட்டும் நீங்கும். 

தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். 

பேரீச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும். 

தேனில் நாட்டு ரோஜா மலரின் இதழ்களை போட்டு ஊறவைத்து உண்பதால், உடலுக்கு பலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும். இதையே குல்கந்து என்பர். 

தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் உணவு உண்பதர்க்கு முன் மூன்று தேக்கரண்டி தேனை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஈரல், வயிற்றுப்புண், பித்தப்பை நோய் சரியாகும்.

பித்த நீர்ச்சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கிவிடுகின்றன.

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

தேன் சிறந்ததென்றாலும் ஓர் அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.  தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.  தேனை சூடாக்குவதை தவிர்க்கவும்.  வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.  தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.  தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே.  அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.  நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும்.  ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

சுத்தமான தேனை கண்டறிய:- ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும், தேன் தண்ணீரில் கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேனாகும்.  

தொகுப்பு – டாக்டர் ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், யோகா ரூ இயற்கை மருத்துவம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செந்தாரப்பட்டி, சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து