முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதாரி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மொனிந்தர் சிங், சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை: காசியாபாத் சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நாட்டையே உலுக்கிய நிதாரி பலாத்கார கொலை வழக்கில், தொழிலதிபர் மொனிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலி ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.

டெல்லியை அடுத்த நொய்டாவில் பிங்கி சர்கார் என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

நிதாரி வழியாக சென்ற இவரை, சுரேந்தர் கோலி, மொனிந்தர் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்த சிங், கொலை செய்து தனது வீட்டுக்கு பின்புறம் புதைத்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பவன் குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “மொனிந்தர் சிங், சுரேந்தர் கோலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள் ளன. அரிதினும் அரிதான இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார். அப்போது குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

நொய்டா பகுதியில் இளம் பெண்கள் அடிக்கடி காணாமல் போயினர். இது தொடர்பாக, 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி மொனிந்தர் சிங்கின் வீட்டில் போலீஸார் சோதனையிட்டதில் 19 பேரின் மண்டை ஓடுகள் புதைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட 19 வழக்குகளில் 16 வழக்குகள் இருவர் மீதும் பதிவு செய்யப் பட்டன. ஆதாரம் இல்லாத காரணத்தால் 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதுவரை 10 வழக்குகளில் இருவருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள வழக்குகள் மீது விசாரணை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து