நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      திருநெல்வேலி

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் நீர்வரத்து

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்கிறது.மாவட்டத்தில் அணை பகுதிகளிலும், ஆலங்குளம், சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஆலங்குளத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை 8.30 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஆலங்குளம் ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆலங்குளம் அம்பை சாலை மற்றும் அப்பகுதியில் உள்ள கோவில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சூழ்ந்து சென்றது. கனமழை காரணமாக ஆலங்குளம் தொட்டியான்குளத்திற்கு அதிகளவில் தண்ணீர் வந்தது.வடிகால் வசதி இல்லாததால் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இடி-மின்னலுடன் மழை கொட்டியதால் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் அம்பையில் பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏற்கனவே குண்டாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன.143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணை நீர்மட்டம் நேற்று 98.80 அடியாக இருந்தது. மாலையில் இது 100 அடியை தாண்டியது. வெள்ளியன்று  காலை இந்த அணையின் நீர்மட்டம் 100.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,765 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 304.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம்  114.63 அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம்  79 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 859 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.50 அடியாகவும், 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை அணை 67 அடியாகவும், 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை 68.24 அடியாகவும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து