ரூ.413 கோடியில் நெல்லை-தென்காசி இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி மார்ச் மாதம் துவக்கம்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      திருநெல்வேலி
nellai dro

நெல்லை-தென்காசி இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப்  பணிக்கு ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி வரும் மார்ச் மாதம் துவங்கும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தெரிவித்ததார்.

விரிவாக்கப்  பணி

நெல்லை தென்காசி மாநில  நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும்  நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு  இழப்பீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை வகித்தார். சாலை மேம்பாட்டு திட்ட கோட்ட பொறியாளர்கள் வேல்ராஜ், உதவி பொறியாளர் சதீ~ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லுரணி, குணராமநல்லுர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீடு தொகை தற்போதைய மார்க்கெட் மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது, தற்போது அரசு அகலப்படுத்த உள்ள சாலையின் நீளம் மற்றும் அகலம் எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது, பாவூர்சத்திரத்தில் மேம்பாலம் எப்படி வருகிறது. அவ்வாறு வந்தால் துணைச் சாலை எவ்வாறு அமைக்கப்படும். ஒருசில கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாத காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு  புகார்களையும் சந்தேகங்களையும் கூறினர். இதற்கு பதிலளித்து சாலை மேம்பாட்டுத்திட்ட தனி வருவாய் அலுவலர் அபிராமி கூறியதாவது.:   நெல்லை மாவட்டத்தின் பிரதான மாநில நெடுஞ்சாலையான நெல்லை தென்காசி இடையேயான 49 கிமீட்டர்  நெடுஞ்சாலை 31 மீட்டர் முதல் 35 மீட்டர் வரையிலான அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசு 413 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  சாலையின் நடுவில் இரண்டு சாலையையும் பிரிக்கும் தடுப்புகளுடன்  அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்திற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ள வளைவுகள் திருத்தி நேர்வழியாக வரும் அளவில் சீரமைக்கப்பட உள்ளது. பாவூர்சத்திரத்தில் உள்ள இரயில்வே பாதையை கடக்கும் விதமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 31 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்படஉள்ளது. ரயில்வே பாதைக்கு மேற்கே 500 மீட்டராகவும் கிழக்கில் 500 மீட்டராகவும் பிரித்து 20 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. பாலத்தின் அருகில் சுரங்க வழி நடைப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் 5.50 மீட்டர் அகலத்தில்  துணைவழிச்சாலை மேலப்பாவூர் மற்றும் ரயில்வே நிலையத்திற்கு செல்லும் வகையில் சீரமைக்கப்படும். அரசுக்கு தேவைப்படும் நிலத்தின்  உரிமையாளர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பட்டா மாறாத காரணத்தால் முந்தைய உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து இழப்பீடு  பெற்றுக்கொள்ள வழிசெய்யப்படும்.   இந்த வழித்தடத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விவரப்படி நிலம் கட்டிடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படடும். அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு தொகைகுறைவாக உள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கான படிவம் உள்ளது. அதனை பூர்த்தி செய்து எங்களிடம் மனுவாக தாருங்கள். நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தற்போது பெரும்பாலான நில உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அரசு உரிய பணத்தை வழங்கிவிட்டது. தென்காசி வட்டத்தில் உள்ள உரிமையாளர்களுக்கு விரைவில் பணம் வழங்கப்படும்.இன்னும் ஓரிரு வாரதில் சாலை அளவுகள் குறிக்கப்பட்டு, வருகின்ற மார்ச் மாதத்தில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. பொதுமக்களின் நலனுக்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள வாகன போக்குவரத்து நெருக்கடிகளை  மனதில் கொண்டும் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இத்திட்டம் சிறப்பாக நிறைவடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் தனி வட்டாடச்சியர் சேதுராமலிங்கம், கல்லுரணி வருவாய் ஆய்வாளர் ஜெமிலாபானு, கல்லுரணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் இராம.உதயசூரியன், முன்னாள் பஞ். தலைவர்கள் அருணோதயம், தமிழ்செல்வன் என்ற ராமசாமி  வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயசந்திரன்,  ராமச்சந்திரன், பூபால்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து