நெல்லையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் 100 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      திருநெல்வேலி
minister rajalakshmi start the amma two wheeler scheme

திருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தலைமையில்  நடைபெற்றது. இவ்விழாவில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.24,95,687/- மானியத்திலான அம்மா இரு சக்கர வாகனத்தினை வழங்கினார்.விழாவில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  பேசியதாவது-

அம்மா இரு சக்கர வாகனம்

புரட்சித்தலைவி அம்மா  பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா  வேலைக்கு செல்லும் மற்றும் சொந்தமாக தொழில் செய்யும் உழைக்கும் மகளிர்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல், தங்களது அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் செய்திட ஏதுவாக, ஆண்டிற்கு ஒரு லட்சம் மகளிருக்கு 50 சதவித மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள்.  பாரத பிரதமர் ,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும்  ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை 24.02.2018 தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 8 மகளிர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 14 மகளிர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் 34 மகளிர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 44 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 100 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.24.96 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களை பெறும் மகளிர்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார். விழாவிற்கு தலைமை வகித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி,  பேசியதாவது-தமிழ்நாடு அரசு வேலைக்கு செல்லும் பெண்களின் பல்வேறு சிரமங்களை குறைக்கும் வகையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பெண்கள் படித்ததற்கு பிறகு வேலைக்கு செல்லவும், வரவு செலவுகளை சுதந்திரமாக செய்திடவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் வீட்டில் குழந்தைகளை கவனிக்கவும், சமையல் பணிகளையும், குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை வீட்டில் செய்து முடித்து விட்டு, பணிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்களின் சிரமங்கள் குறைந்து விரைவாக பணிகளை முடிக்க முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். இன்று 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 125 சிசிக்கு குறைவில்லாத வாகனங்கள் ஜனவரி 2018-க்கு பின்பு தயார் செய்யப்பட்ட வாகனங்களை வாங்க வேண்டும். விண்ணப்பிக்கும் மகளிருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மகளிரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு குறைவாக இருந்திட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில், இவ்வாண்டில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட முன்னுரிமை பெற்றோருக்கும், மற்ற மகளிருக்கும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டோருக்கு வழங்கப்படும். வாகனத்தின் விலையில் 50 சதவிதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் கடன் பெற்று, வாகனம் வாங்குவோருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று வாகனம் பெறும் நீங்கள் இதை நல்லபடியாக பயன்படுத்தி, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், அ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், கூட்டுறவு பேராங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் மகபூப் ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், திருநெல்வேலி கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் செவல் முத்துசாமி, முக்கிய பிரமுகர்கள் சுதா பரமசிவம், பரணி சங்கரலிங்கம், தச்சை மாதவன், ஜெரால்ட், சேர்மபாண்டி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து