பேச்சுப்போட்டி , கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தேனி
theni collecter19 3 19

தேனி- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பல்லவி பல்தேவ்   தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்   பொதுமக்களிடமிருந்து 330 பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, 9 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், 4 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 33 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
 பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து (2017-18) தலா ரூ.7,100 - மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,400 - மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், 6-8, 9-10, 11-12 வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவர்களிடையே “மது உபயோகித்தலுக்கு எதிரான விழிப்பணர்வு” என்ற தலைப்பில் பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்  வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  .ச.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து