முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி: போராடி தோற்றது இந்தியா - இங்கிலாந்து வென்று முன்னிலை

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்ஹாம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி போராடி தோல்வி தழுவியது. 194 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 110/5 என்ற நிலையிலிருந்து 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. தனது 1000-வது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்தத் தோல்வி குறித்து இந்திய அணி பெரிதாக ஏமாற்றமடைய வேண்டியத் தேவையில்லை, மிக அருமையான தொடக்கமாக இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் அமைந்தது, எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போது நம் பவுலர்களுக்கு வந்திருக்கும்.

அதேசமயம், பேட்ஸ்மென்கள் இன்னும் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும், குறிப்பாக தவண், ராகுல், விஜய், ரஹானே போன்ற 4 முக்கிய வீரர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினால் விராட் கோலி மட்டும் தனி நபராக எப்படி வெற்றி பெற முடியும்?

நேற்று இஷாந்த் சர்மாவுக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுத்ததோடு அவரே ரஷீத்தை தைரியமாக ஸ்வீப் ஆடியபோது ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் வைக்காமல் 2 ரன் ஓடி இசாந்திடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தது, சமயோசிதமற்ற மவுட்டீகமே. அதே ஓவரில் இஷாந்த் சர்மா, ரஷீத்திடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.

8 விக்கெட்டுகள் இருக்கும்போது இஷாந்தை ஸ்ட்ரைக்கிலிருந்து காத்து ஆடியிருக்க வேண்டும் 9 விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நிலையில் கரணம் தப்பினால் மரணம், 2ம் வாய்ப்பு கிடையாது எனும்போது உமேஷ் யாதவ்வை வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது.

மேலும் இந்தமாதிரி இலக்கையெல்லாம் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். அச்சமற்ற கிரிக்கெட் ஆட வேண்டும், தொடர்ந்து அந்த லெந்த்தில் அவர்களை வீச அனுமதித்திருக்கக் கூடாது, வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

194 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. 84 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டநிலையில் 4-வது நாள் ஆட்டத்தைக் கோலி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும் தொடர்ந்தனர்.

எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் காலை நேரத்தில் 20 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும், ஸ்விங் நன்றாக எடுக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், ஸ்டோக்ஸ், பிராட், ஆன்டர்ஸன் பந்துவீச்சில் அனல் பறந்தது.

நினைத்தது போல ஆன்டர்ஸன் முதல் ஓவரில் மிகுந்த கட்டுக்கோப்பாக வீசினார். லைன் அன்ட் லென்த்தை விட்டு விலக்காமல் வீசியதால், தினேஷ் திணறினார்.
முதல் பந்திலிருந்து அவுட் சைடாக விலகிச் சென்ற பந்தை தொட முயன்று தயங்கி, தயங்கி விளையாடிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தை தொட முற்பட்டு, பந்து பேட்டை முத்தமிட்டு கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. 20 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும், கோலியும் நிதானமாக ஆடினார். இங்கிலாந்து வீரர்களின் கவனம் முழுவதும் கோலி மீதே இருந்தது. எப்படியாவது கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நெருக்கமாகப் பந்துவீசினார்கள். இருமுறை கோலிக்கு எல்பிடபியுள் அப்பீல் செய்தும் அவருக்கு அது சாதகமாக அமைந்தது.

அதேசமயம், ஹர்திக் பாண்டியா தனக்கே உரிய ஸ்டையிலில் விளையாடி, பிராட் பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை விளாசினார். கோலியும் பவுண்டரி அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி இலக்கை மெதுவாக நெருங்கியது. ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 47-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசி இந்த நம்பிக்கையை உடைத்தார்.

விராட் கோலி முதல் இன்னிங்ஸில் கவுரமான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தார், 2-வது இன்னிங்ஸிலும் வெற்றிக்குப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தார் ஸ்டோக்ஸ்.

விராட் கோலி வெளியேறியவுடன் இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகமும், புதிய நம்பிக்கையும் பிறந்துவிட்டது. அடுத்துக் களமிறங்கிய முகமது ஷமிக்கு ஒரு பவுன்சரை எழுப்பித் தொடவைத்து வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்திய அணியின் தோல்வி முடிவானது.

அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைத்து ஆடினார். ஆனால் டெயில் என்டர்கள் பேட் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஆதரவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் இன்னிங்ஸில் இதை கேப்டன் கோலி சரியாகச் செய்து வீரர்களுக்குப் பாடம் நடத்தினார். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, சாம் கரன், ராஷித் பந்துவீச்சை இசாந்த் சர்மாவை எதிர்கொள்ள வைத்தது பெரிய முட்டாள்தனமாகும்.

ஒரு பந்தில் ஒரு ரன்னை எடுக்கவைத்துவிட்டு மீதமுள்ள பந்துகளை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டிருக்க வேண்டும்.அதைச் செய்யவில்லை. அந்த சூழலிலும் இசாந்த் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஆதில் ராஷித் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகி எல்பிடபிள்யு முறையில் இசாந்த் 11 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்தார். இப்போதும் அதேத் தவறை ஹர்திக் பாண்டியா செய்து, உமேஷ் யாதவை பந்துகளை எதிர்கொள்ளச் செய்தார். ரன்களும் சேரவில்லை. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. சாம் கரன் ஆட்டநாயகனாகன் ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து