குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக ஆதாரம் உள்ளது: பாகிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      உலகம்
Kulbushan

இஸ்லாமாபாத், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக உறுதியான ஆதாரம் தங்கள் நாட்டிடம் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தான் அதிகாரிகளால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜாதவ் கைது செய்யப்பட்டதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபடும் திட்டத்துடன் ஈரானில் இருந்து ஊடுருவியதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா 2017-ம் ஆண்டு மே மாதம் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷா முகமது குரேஷி, பஞ்சாப் மாகாணத்திலுள்ள முல்தான் நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக பாகிஸ்தானிடம் உறுதியான ஆதாரம் உள்ளது. ஆதலால், சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து